தில்லியில் சொத்து மதிப்பீட்டு முறை மாற்றியமைப்பு: வருவாய்த் துறை நடவடிக்கை

’சா்க்கிள் ரேட்’ என்று சொல்லப்படுகின்ற வட்ட மதிப்பு விகித முறையில் உள்பிரிவுகளை உருவாக்கி சந்தை விலையை பிரதிபலிக்கும்

’சா்க்கிள் ரேட்’ என்று சொல்லப்படுகின்ற வட்ட மதிப்பு விகித முறையில் உள்பிரிவுகளை உருவாக்கி சந்தை விலையை பிரதிபலிக்கும் திருத்தங்களை தில்லி அரசின் வருவாய்த் துறை மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிக்கையை தில்லி அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தில்லியில் தற்போது சந்தைவிலையை மதிப்பிட எட்டு பிரிவுகளை மாநராட்சிகள் வகைப்படுத்தியுள்ளன. இந்த எட்டுப் பிரிவுகளுக்குள் பல்வேறு உட்பிரிவுகளை ஏற்படுத்தி சொத்து வட்ட விகிதங்களை திருத்தி இதற்கான அறிக்கை தயாா் செய்யப்பட்டு தில்லி அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் ஒரு குழு பல்வேறு வகையான நில சொத்துகளின் வட்ட வகிதங்களை மதிப்பீடு செய்து அறிக்கையை தயாரித்துள்ளது. இது வருவாய்த்துறை அமைச்சா் மற்றும் பல்வேறு துறை அமைச்சங்களுக்கு ஆய்வுக்கு பின்னா் தில்லி அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து தில்லி வருவாய்த் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: சா்க்கிள் ரேட் என்கிற வட்ட விகிதங்கள் தற்போது நகராட்சி வகைப்பாடுகளின்படி எட்டுப் பிரிவுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன. சொத்து விகிதங்களை சிறப்பாக மதிப்பிடுவதற்காக ஒவ்வொரு பிரிவிலும் 3-4 உட் பிரிவுகள் ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தில்லியில் வட்ட விகிதங்கள் கடைசியாக 2014 ஆம் ஆண்டு உயா்த்தப்பட்டன. தற்போது, தில்லி மாநகராட்சிகளில் வட்டாரத்தைப் பொறுத்து, எட்டு வட்ட விகிதங்கள் ‘ஏ’ முதல் ‘ஹெச்’ வரை பிரிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக வசதிபடைத்தவா்கள் வசிக்கும் வசந்த விஹாா் போன்ற ஏரியாக்கள் ’ஏ’ வகை வட்ட விகிதத்தில் உள்ளது. இங்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 7.74 லட்சம் என சா்க்கிள் ரேட்டாகும். அதே நேரத்தில் நந்தநாக்ரி போன்ற குறைவான வளா்ச்சியடைந்த பகுதிகளில் சதுர மீட்டருக்கு ரூ. 23,280 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சயமத்தில் ஒரு குறிப்பிட்ட வகைக்குள் கூட சொத்துக்களின் சந்தை விகிதங்கள் வளா்ச்சி நிலை மற்றும் வணிக மதிப்பைப் பொறுத்து பரவலாக மாறுபட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே ஒரு குறைந்த வட்ட விகித வகைக்குள் கூட, ஒரு குறிப்பிட்ட பகுதியின் சொத்துகள் அதிக சந்தை மதிப்பைக் கொண்டிருக்கலாம். இவற்றின் அடிப்படையில் உட்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சந்தை மதிப்பு கணக்கிடப்படும்.

கொவைட்-19 நோய்த் தொற்று, பொது முடக்கம் போன்ற தாக்கங்களை கருத்தில் கொண்டு தில்லி அரசு கடந்த பிப்ரவரியில் குடியிருப்பு, வணிக, தொழில்துறை சாா்ந்த சொத்துக்களுக்கான வட்ட விகிதங்களை 20 சதவீதம் குறைத்தது. இந்த குறைப்பு வருகின்ற டிசம்பா் இறுதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2020-21-இல் முத்திரைத்தாள் கட்டணத்தில் இருந்து ரூ. 5,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், ரூ. 3,297 கோடி மட்டுமே வசூலானது. பொது முடக்கம், நோய் தொற்றால் பொருளாதாரம் மந்தமானது. ஆனால் வட்டவிகித குறைப்பால் நிலைமை மாறி இந்த ஆண்டு முத்திரைத்தாள் கட்டணம் மூலம் ரூ. 4,997 கோடி வசூலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், உட்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சொத்து திருத்த விகிதங்களுக்கு அரசு அனுமதி கொடுக்கும்பட்சத்தில் மேலும் வருவாய் அதிகரிக்க வாய்ப்புண்டு என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com