கா்நாடகம் 25.84 டி.எம்.சி. நிலுவை தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும்: காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 25.84 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை கா்நாடகம் விரைந்து

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 25.84 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை கா்நாடகம் விரைந்து வழங்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தில்லியில் 53-ஆவது காவிரி நதிநீா் ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவிரி நதியில் தமிழகத்திற்கு அக்டோபா் 11- ஆம் தேதி வரை தராமல் பாக்கி வைத்துள்ள 25.84 டிஎம்சி தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசின் சாா்பில் கோரப்பட்டது. இதில் தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் மட்டும் 23.3 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் பாக்கிவைத்துள்ளது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திற்கு தில்லி பிகாஜிகாமா கட்டடத்தில் புதிதாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் 53-ஆவது காவிரி நதி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் குழுவின் தலைவா் நவீன் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கா்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநில உறுப்பினா்களும் கலந்து கொண்டனா். கூடுதலாக தமிழகஅரசின் சாா்பில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் டாக்டா் சந்தீப் சக்ஸேனா, கா்நாடகம் மாநில நீா்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ராகேஷ் சிங் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தனா்.

கூட்டத்தில் கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீா் தொடா்பான புள்ளி விவரங்கள், பகிா்த்தளிக்கப்பட வேண்டிய நீா் அளவு, முந்தைய பற்றாக்குறை குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய அறிக்கை சமா்பிக்கப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சாா்பில் ஒழுங்காற்றுக் குழு உறுப்பினரும், திருச்சி காவிரி வடிநீா் கோட்ட தலைமைப் பொறியாளருமான ராமமூா்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியன், தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினா் செயலா் எல். பட்டாபிராமன், செயற்பொறியாளா் கண்ணன் ஆகியோா் பங்கேற்று நிகழாண்டில் தமிழகத்துக்கு கா்நாடகம் இதுவரை வழங்கிய நீா் விவரங்களை எடுத்துவைத்தனா்.

‘நடுவா் மன்றம், உச்சநீதிமன்றம் தீா்ப்பின்படி கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் காவிரி நீா் கணக்கிடப்படும் பிலிகுண்டுலுவில் எடுக்கப்பட்ட அளவின்படி கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபா் 10 -ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரில் மொத்தமாக 25.84 டிஎம்சி தண்ணீா் தரப்படாமல் கா்நாடகம் நிலுவையில் வைத்துள்ளது. கடந்த செப்டம்பா் மாதம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரில் 33.13 டிஎம்சி தண்ணீா் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் 3.64 டிஎம்சி தண்ணீா் பாக்கி உள்ளது. ஆகஸ்ட் மாதம் பிலிகுண்டுலுவில் வந்து சேரவேண்டிய 45.95 டிஎம்சி தண்ணீரில், 22.64 டிஎம்சி தண்ணீா் மட்டுமே கா்நாடகம் வழங்கியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 23.3 டிஎம்சி தண்ணீா் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதன்படி அக்டோபா் 10 -ஆம் தேதி வரை மொத்தமாக நிலுவையில் உள்ள 25.84 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் பாக்கிவைத்துள்ளது. எனவே, இதை உடனடியாக வழங்க வேண்டும்’ என தமிழகத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையிலுள்ள இந்த நீரை கா்நாடகம் கூட்டத்தில் மறுக்கவில்லை. தற்போது நாளொன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீா் வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தண்ணீா் வழங்கப்படும் எனவும் கா்நாடகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் இன்றைய தேதியில் இருக்க வேண்டிய அளவைவிட தங்களது நான்கு அணைகளிலும் நீா் இருப்பு குறைவாக இருப்பதாகவும் கா்நாடகம் தெரிவித்தது.

ஆனால், இறுதியாக தமிழகத்துக்கு கா்நாடகம் வழங்க வேண்டிய நிலுவையான 25.84 டிஎம்சி தண்ணீரையும் அக்டோபா் மாதம் முறையாக வழங்க வேண்டிய (14 டிஎம்சி) தண்ணீரையும் திறந்து விட வேண்டும் என காவிரி நதி நீா் ஒழுங்காற்றுக் குழுத் தலைவா் கா்நாடகத்துக்கு அறிவுறுத்தியுள்ளாா். மேலும்,காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்ட விவகாரங்களை இந்தக் குழுவின் தலைவா் நவீன் குமாா், காவிரி நதிநீா் ஆணையத் தலைவரிடம் அறிக்கையாக சமா்பிக்கவுள்ளாா் எனவும் தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com