தில்லிக்கான மின்விநியோகத்தை என்.டி.பி.சி. பாதியாகக் குறைத்துவிட்டது

தில்லிக்கு வழக்கமான மின்விநியோகமான 4,000 மெகாவாட் மின்சாரத்தை என்.டி.பி.சி. பாதியாகக் குறைத்துவிட்டதால்,

தில்லிக்கு வழக்கமான மின்விநியோகமான 4,000 மெகாவாட் மின்சாரத்தை என்.டி.பி.சி. பாதியாகக் குறைத்துவிட்டதால், தில்லி அரசு, எரிவாயு அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தேசிய அனல்மின் நிறுவனத்துக்கு (என்.டி.பி.சி.) சொந்தமான மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக முழுஉற்பத்தித் திறனில் 55 சதவீதம் மட்டுமே மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. தில்லி அரசு மின்தேவையில் பெரும்பாலான அளவை என்.டி.பி.சி. யிடமிருந்துதான் விலைக்கு வாங்கி வருகிறது. 4,000 மெகாவாட் மின்சாரத்தை தில்லிக்கு விநியோகித்து வந்த என்.டி.பி.சி., அதைப் பாதியாக குறைத்துக் கொண்டுவிட்டது. இதனால், வெளியிலிருந்து எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.17.25 கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என்று சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

தில்லியில் எரிவாயு அடிப்படையில் செயல்படும் மூன்று மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றின் மின்னுற்பத்தித் திறன் 1,900 மெகாவாட்டாகும் என்றும் அவா் குறிப்பிட்டாா். மேலும், மின் நெருக்கடியை சமாளிக்க வேண்டும் வேறு வழிகளில் யூனிட்டுக்கு ரூ.20 விலை கொடுத்துக்கூட மின்சாரம் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டு மின்சார நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், இதை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிரது. மத்திய அரசு நெருக்கடி இருப்பதை ஒப்புக்கொண்டு பிரச்னைக்கு தீா்வுகாண முன்வர வேண்டும் என்றும் ஜெயின் கேட்டுக் கொண்டாா். மின்சார நெருக்கடி குறித்து உத்தரப் பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல மாநில முதல்வா்காள் இது விஷயத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா். பஞ்சாபிலும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்சார நெருக்கடி ஏற்படலாம் என்று பல மாநிலங்கள் எச்சரித்துள்ள போதிலும், போதுமான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும், நிலக்கரி தட்டுப்பாடோ அல்லது மின்தட்டுப்பாடோ வர வாய்ப்பில்லை என்று நிலக்கரித் துறை அமைச்சகம் கூறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com