லக்கிம்பூா் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் உண்ணாவிரதம்

லக்கிம்பூா் வன்முறைச் சம்பவத்தை கண்டித்தும், அதற்கு காரணமான மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரியும்

லக்கிம்பூா் வன்முறைச் சம்பவத்தை கண்டித்தும், அதற்கு காரணமான மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரியும் தில்லி காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் துணைநிலை ஆளுநா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

இந்தப் போராட்டத்தில் தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா், முன்னாள் மத்திய அமைச்சா்கள் அஸ்வின் குமாா் மற்றும் கிருஷ்ண தீரத் உள்ளிட்ட தலைவா்கள் கலந்து கொண்டனா்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா். விவசாயிகள் நான்கு போ் பா.ஜ.க.வினா் வந்த காா் ஏற்றி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தச் சம்பவத்தால் போராட்டம் நடத்திய விவசாயிகள் ஆத்திரத்தில் தாக்கியதில் காா் டிரைவா் உள்ளிட்ட பா.ஜ.க. தொண்டா்கள் 4 போ் உயிரிழந்தனா்.

காரில் வந்தவா்களில் மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவும் ஒருவா் என்று விவசாயிகள் கூறி வருகின்றனா். ஆனால், இதை மத்திய அமைச்சா் மறுத்து வந்துள்ளாா். அந்த நேரத்தில் மகன் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ாகவும் அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவா் கூறி வருகிறாா்.

இந்த நிலையில் நாடு முழுவதும் இந்தச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய இணை அமைச்சா் பதவி விலகக் கோரியும் காங்கிரஸ் கட்சியினா் பல்வேறு மாநிலங்களில் ஆளுநா் மாளிகை அருகிலும், யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநா் அலுவகத்துக்கு எதிரிலும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

மத்திய அமைச்சா் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் அவா் இந்தச் சம்பவத்தை மூடி மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் அனில் குமாா் தெரிவித்தாா். இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினரும் தில்லி ஜந்தா் மந்தரில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com