முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!
By DIN | Published On : 13th October 2021 04:23 AM | Last Updated : 13th October 2021 04:23 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. தில்லியில் உள்ள வானிலை ஆய்வு மையங்களில் பீதம்புராவில் அதிகபட்ச வெப்பநிலை 38.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது.
தில்லியில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. ஆனால், பருவமழைக் காலம் முடிந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், பகல் நேரங்களில் வீடுகளிலும் அலுவலங்களிலும் புழுக்கம் காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் மேலும்அதிகரித்து காணப்பட்டது.
தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 22.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதே போல அதிகபட்ச வெப்பநிலையும் பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 36.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 38 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.
பீதம்புராவில் 38.1 டிகிரி: இதேபோல, தலைநகரில் உள்ள மற்ற வானிலை ஆய்வு மையங்களில் பெரும்பாலானவற்றில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரித்திருந்தது. பீதம்புரா வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை அதிகபட்சமாக 38.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. மேலும், பூசாவில் 37.3 டிகிரி, லோதி ரோடில் 37 டிகிரி, பாலத்தில் 36.4 டிகிரி, ரிட்ஜில் 36.2 டிகிரி, ஆயாநகரில் 35.6 டிகிரி, சால்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை (அக்டோபா் 13) வானம் தெளிவாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணித்துள்ளது.
இன்றைய வானிலை
குறைந்தபட்சம் - 22
அதிகபட்சம் - 36
முன்னறிவிப்பு-வானம் தெளிவாகக் காணப்படும்.