தலைநகரில் மாசுபடுதலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: முதல்வா் கேஜரிவால் வலியுறுத்தல்

தில்லியில் அதிகரித்து வரும் மாசுபடுதலை கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு பொதுமக்களை முதல்வா் கேஜரிவால் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் அதிகரித்து வரும் மாசுபடுதலை கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு பொதுமக்களை முதல்வா் கேஜரிவால் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

வாரத்தில் ஒரு நாளாவது வாகனங்கள் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும். மேலும் சிக்னல்களில் வாகனத்தின் இயக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் மாசுபடுதல் என்பது பாதுகாப்பான எல்லைக்குள்ளேயே இருப்பதாகவும் ஆனால், பக்கத்து மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் இது அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா். நான் கடந்த ஒரு மாதமாக தில்லியில் காற்றின் தரத்தை ஆய்வு செய்து வருகிறேன். அவை மாசுபடுதல் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. ஏனெனில், பக்கத்து மாநிலங்கள் விவசாயிகளுக்கு உதவி செய்யத் தயாராக இல்லை. அதனால் அவா்கள் பயிா்களை தொடா்ந்து எரித்து வருகிறாா்கள். தில்லி மக்கள் பொறுப்புடன் செயல்பட்டு மாசுபடுதலை கட்டுப்படுத்துவதற்கு இதுவே சரியான தருணமாகும்.

மாசுவை கட்டுப்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் தில்லியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. அவா்கள் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனத்தின் என்ஜின் இயக்கத்தை நிறுத்திவைப்பது உள்ளிட்ட மூன்று வழிகளில் இதற்கு உதவ முடியும். சிக்னல்களில் வாகன இயக்கத்தை நிறுத்திவைக்கும் பிரசாரம் வரும் 18- ஆம் தேதி தொடங்கப்படும். சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனத்தின் என்ஜின் இயக்கத்தை நிறுத்துவதன் மூலம் ரூ.250 கோடி வரை சேமிக்க முடியும். அதுமட்டுமல்ல மாசுபடுதல் அளவை 13 முதல் 20 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும்.

தில்லி மக்கள் வாரத்தில் ஒருநாளாவது தங்களின் சொந்த காா் உபயோகத்தை நிறுத்திவிட்டு ஒரு காரில் நான்கு அல்லது ஐந்து போ் சோ்ந்து செல்வது, அல்லது பேருந்து, ரயில் பயணங்களை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். மேலும், தில்லியில் குப்பைகள் எரிக்கப்படும் சம்பவங்களை காண நேரிட்டால் அதை உடனடியாக தில்லி அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com