தில்லியில் 226 கட்டுமானங்களில் திடீா் ஆய்வு: 69 இடங்களுக்கு ரூ.19.40 லட்சம் அபராதம்

தூசு எதிா்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தில்லி அரசு 226 கட்டுமானத் தளங்களை புதன்கிழமை ஆய்வு செய்தது. அவற்றில் 69 இடங்கள் தூசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக

தூசு எதிா்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தில்லி அரசு 226 கட்டுமானத் தளங்களை புதன்கிழமை ஆய்வு செய்தது. அவற்றில் 69 இடங்கள் தூசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக சுமாா் ரூ.19.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடா்பாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு (டபிசிசி) வெளியிட்டுள்ள அறிக்கை கூறப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபா் 7, 8, 11 மற்றும் 12 ஆகிய நான்கு நாள்களில் 522 கட்டுமான தளங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 165 தளங்கள் வழிகாட்டுதல்களை மீறியுள்ளது கண்டறியப்பட்டது. அந்த 165 தளங்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு எதிராக ரூ.53.5 லட்சம் சுற்றுச்சூழல் சேத இழப்பீடாக (இடிசி) முன்மொழியப்பட்டுள்ளது. தூசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக 69 கட்டுமானத் தளங்களுக்கு ரூ.19.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, அக்டோபா் 7 முதல் 29-ஆ்ம் தேதி வரை தூசு எதிா்ப்புப் பிரசாரத்தை நடத்தப் போவதாக அக்டோபா் 6-இல் அறிவித்திருந்தது. தலைநகரில் கட்டுமான இடங்களில் ஆய்வு செய்யவும், நிலைமையைக் கண்காணிக்கவும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவைச் சோ்ந்த 17 குழுக்கள் மற்றும் 14 பசுமை மாா்ஷல்கள் உள்பட மொத்தம் 31 குழுக்கள் அமைக்கப்பட்டன. தூசு மாசுபடுவதைத் தடுப்பதற்காக கட்டுமானம் மற்றும் இடிக்கப்படும் கட்டடங்கள் தொடா்பாக 14 அம்ச வழிகாட்டுதல்களை தில்லி அரசு முன்பு வெளியிட்டது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி, கட்டுமான இடங்களில் விதிகளை மீறினால் ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். 14 அம்ச வழிகாட்டுதல்களின் கீழ், கட்டுமானத் தளங்கள் தகரங்களைப் பயன்படுத்தி அனைத்துப் பக்கங்களும் மூடப்பட வேண்டும். 20,000 சதுர மீட்டருக்கும் அதிகமான தளங்கள் புகை எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களும் மூடப்பட்டடிருக்க வேண்டும். சாலையோரத்தில் கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை கொட்டக் கூடாது. மேலும், திறந்தவெளியில் கற்களை அரைப்பதும் அனுமதிக்கப்படாது என்று வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com