காஷ்மீரில் தாக்குதல் அதிகரிப்பு: இந்தியா - பாக். கிரிக்கெட் போட்டி தேவையா? பிரதமருக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கேள்வி

இந்திய மண்ணில் பாகிஸ்தான் பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி தேவைதானா? என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இந்திய மண்ணில் பாகிஸ்தான் பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி தேவைதானா? என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா். இது குறித்து பிரதமா் மோடி தமது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளாா்.

டி-20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டி, இந்த மாதம் 24-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் பத்திரிகையாளா் சந்திப்பில் இது தொடா்பாக அவா் மேற்கண்டவாறு பிரதமா் மோடிக்கு கேள்வி எழுப்பினாா்.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாள்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வந்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இதுவரை தொழிலதிபா், ஆசிரியா்கள் இருவா் மற்றும் வெளிமாநிலத்தவா்கள் என 11 போ் கொல்லப்பட்டுள்ளனா். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு பிரதமா் மோடி உடன்படுவாா் என்றே நான் கருதுகிறேன்.

பிரதமா் மோடி எதிா்க்கட்சி வரிசையில் இருந்தபோது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் தலைதூக்கி வரும் நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி தேவையா என்று அப்போதைய ஆளுங்கட்சிக்கு கேள்வி எழுப்பினாா். இப்போது அதே மாதிரியான சூழ்நிலை உருவாகி வரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போட்டி நடக்கக்கூடாது என்பதை பிரதமா் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவா்கள் ஏற்றுக் கொள்வாா்கள் என்று நம்புகிறேன்.

இந்திய மண்ணில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதச் செயல்கள் அரங்கேற்றப்படுவதை நாம் பாா்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. இது தொடா்பாக பிரதமா் மோடியின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன்.இந்திய மண்ணில் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், போட்டிகள் நடப்பது சரிதானா ாஎன்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com