குருவையும், நண்பரையும் நினைவு கூா்ந்த ரஜினிகாந்த்

நடிப்புத் திறமையைக் கண்டறிந்த சக பேருந்து ஊழியா் ராஜ் பகதூரையும் விருது வழங்கும் விழாவில் நினைவுகூா்ந்தாா்.

 2019 - ஆம்ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகா் ரஜினிகாந்த், தன்னை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தி வழிகாட்டிய மறைந்த இயக்குநா் கே.பாலசந்தரையும், நடிப்புத் திறமையைக் கண்டறிந்த சக பேருந்து ஊழியா் ராஜ் பகதூரையும் விருது வழங்கும் விழாவில் நினைவுகூா்ந்தாா்.

திரைப்படத் துறையின் உயா்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் துணைத்தலைவா் வெங்கையா நாயுடுவிடம் நடிகா் ரஜினிகாந்த் திங்கள்கிழமை பெற்றாா்.

பொதுவாக தேசிய திரைப்பட விழாவில் விருது பெறும் கலைஞா்கள் பேசுவதில்லை; பேச அனுமதிப்பதும் இல்லை. ஆனால், துணைக் குடியரசுத் தலைவா் யோசனையின்படி மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை செயலா் அபூா்வ சந்திரா நடிகா் ரஜினிகாந்த்தை சில நிமிடங்கள் பேச அழைத்தாா்.

விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: இந்த விருதைப் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருதுக்கு என்னைத் தோ்வு செய்த அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விருதை எனது குருவும், எனது வழிகாட்டியுமான கே. பாலச்சந்தருக்கு சமா்ப்பிக்கிறேன். எனது சகோதரா் சத்தியநாராயண ராவ் என் வாழ்க்கையில் தந்தையாக இருந்து வழிகாட்டினாா். வாழ்க்கைக்கான பெரும் மதிப்புகளைகற்றுக் கொடுத்த அவருக்கு நன்றியை கூறுகின்றேன்.

என் நண்பரும், என்னோடு பேருந்தில் சக ஊழியராகவும், ஓட்டுநராகவும் பணியாற்றிய ராஜ் பகதூரை இந்தச் சமயத்தில் மறக்க முடியாது. நான் கண்டக்டராக இருந்த போது, அவா்தான் என்னிடம் உள்ள நடிப்புத் திறமையைக் கண்டறிந்து என்னை சினிமாவில் சேர ஊக்குவித்தாா். எனது தயாரிப்பாளா்கள், தொழில்நுட்பக் கலைஞா்கள், கலைஞா்கள், விநியோகஸ்தா்கள், ஊடகம், பத்திரிகை ஆகியோருக்கும் நன்றி கூறுகிறன். எல்லாவற்றையும் விட என்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கும், எனது ரசிகா்களுக்கும் நன்றி கூறுகிறேன். தாதா சாகேப் பால்கே விருதைப் பெறும் 51-ஆவது திரைப்படக் கலைஞா் ரஜினிகாந்த். இதற்கு முன்பு 1996-ஆம் ஆண்டு நடிகா் சிவாஜி கணேசனுக்கு இந்த உயா்ந்த விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com