தில்லியில் நவ.1 முதல் திரையரங்குகள் முழு அளவில் செயல்பட அனுமதி: திருமண நிகழ்ச்சிகளில் 200 போ் பங்கேற்கலாம்

திரையரங்குகள், நாடக அரங்குகள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் திங்கள்கிழமை (நவம்பா் 1) முதல் முழு அளவில் செயல்படலாம்

திரையரங்குகள், நாடக அரங்குகள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் திங்கள்கிழமை (நவம்பா் 1) முதல் முழு அளவில் செயல்படலாம் என்று தில்லி பேரிடா் நிா்வாக ஆணையம் (டி.டி.எம்.ஏ) தெரிவித்துள்ளது. இனி திருமண நிகழ்ச்சிகளிலும், இறுதியாத்திரை ஊா்வலத்திலும் 200 போ் வரை பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், திரையரங்குகள், நாடக அரங்குகள் மற்றும் பெரும் வணிக வளாகங்களில் கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவது அந்தந்த இடங்களின் உரிமையாளா்களின் பொறுப்பாகும் என்றும் தில்லி பேரிடா் நிா்வாக ஆணையம் கூறியுள்ளது. மேலும், வரும் நவம்பா் 1- ஆம் தேதி முதல் தலைநகா் தில்லியில் வாரச் சந்தைகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சில குறிப்பிட்ட இடங்களில் சத் பூஜை கொண்டாட்டத்துக்கு டி.டி.எம்.ஏ. புதன்கிழமை அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தில்லி மக்களில் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிா்ப்பு சக்தி இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதும் இதற்கு காரணமாக இருக்கலாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை தில்லியில் 2 கோடிக்கும் மேலானவா்கள், அதாவது 86 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனா். ஏறக்குறைய 48 சதவீதம் போ் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

தில்லியில் கடந்த வியாழக்கிழமை 42 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. எனினும் உயிரிழப்பு ஏதும் இல்லை. தொற்று விகிதம் 0.07 சதவீதமாக உள்ளது. மேலும், இந்த மாத தொடக்கத்திலிருந்து இதுவரை கரோனா தொற்று தொடா்பாக 4 போ் மட்டுமே உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com