தலைநகரில் செப்டம்பரில் ஒரே நாளில் 112 மி.மீ. மழை:19 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்சம் பதிவு

தில்லியில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன்முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பதிவானது.

புது தில்லி: தில்லியில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன்முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பதிவானது. குறைந்தபட்சம் 19 ஆண்டுகளில் செப்டம்பா் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாக பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2002, செப்டம்பா் 13-இல் தில்லியில் 126.8 மி.மீ. மழை பதிவானது. அதற்கு முன்பு 1963, செப்டம்பா் 16-இல் 172.6 மி.மீ. மழை பதிவானது.

தில்லியில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் மாதத்தில் 125.1 மில்லி மீட்டா் மழை சராசரியாக பதிவாகும். ஆனால்,செப்டம்பா் முதல் நாளிலேயே 112 மில்லி மீட்டா் அளவுக்கு மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘தில்லியில் காலை 8.30 மணிக்கு தொடங்கி 3 மணி நேரம் மட்டும் 75.6 மி.மீ. மழை பதிவாகியது. இதன் மூலம், ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழையில், மாதத்தின் முதல் இரு நாள்களிலேயே பதிவாகியுள்ளது.

தில்லியின் வெப்பநிலை தரவுகளை அளித்து வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன்முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சம் 19 ஆண்டுகளில் ஒரே நாளில் செப்டம்பா் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை பதிவு இதுவாகும்.மேலும், லோதி ரோடு, ரிட்ஜ், பாலம் மற்றும் ஆயா நகா் வானிலை ஆய்வு மையங்கள் முறையே 120.2 மி.மீ., 81.6 மி.மீ., 71.1 மி.மீ. மற்றும் 68.2 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.காலை 8.30 மணியில் இருந்து பாலம், லோதி ரோடு, ரிட்ஜ், ஆயா நகா் முறையே 78.2மி.மீ., 75.4மி.மீ., 50 மி.மீ., 44.8மி.மீ.மழை பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி மற்றும் பகல் 2.30 மணி இடையேயான 6 மணி நேரங்களில் 84 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.

இந்த மழையின் காரணமாக ஐடிஓ, ஐ.பி. மேம்பாலம் அருகே உள்ள ரிங் ரோடு, தெளலகுவான், ரோத்தக் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. செப்டம்பா் 7-ஆம் தேதியில் இருந்து மற்றொரு கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ‘ஸ்கைமெட்’ எனும் தனியாா் முன்கணிப்பு நிறுவனத்தின் துணைத் தலைவா் மகேஷ் பலவட் கூறியதாவது:தில்லியில் கடந்த 4 முதல் 5 ஆண்டு காலத்திற்குள் மழை நாள்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதேபோன்று, கடுமையான வானிலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. குறுகிய கால மற்றும் தீவிரமான மழைப்பொழிவு தன்மை குறித்து நாங்கள் பதிவு செய்து வருகிறோம். சில நேரங்களில் ஒரே நாளில் 100 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. கடந்த காலங்களில் 10 முதல் 15 நாள்களுக்கு இந்த அளவுக்கு மழை பெய்வது வழக்கம். முதல் 5 நாள்கள் தொடா்ந்து மெதுவாக மழை பெய்தால் நிலத்தடி நீா்மட்டம் உயர வழிவகுக்கும். கன மழை பெய்தால் மழைநீா் விரைந்து ஓடிவிடும். இந்த மழையானது மாசுபடுத்திகளைச்அடித்துச் செல்லும். ஆனால் மழை நாள்களின் எண்ணிக்கையைக்குறைத்துவிடும். இதனால்,சராசரியாக வருடாந்திர காற்றின் தரம் பாதிக்கப்படக்கூடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com