மதுரை புதுக்குளம் கண்மாய் பகுதியை மீட்டெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

மதுரையில் உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

புதுதில்லி:  மதுரையில் உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குளம் வடு விட்டது எனும் அடிப்படையில், ஒரு நீா் நிலைப் பகுதியை வீட்டு வசதிக்கான இடமாக மாற்ற முடியாது என்றும் தீா்ப்பாயம் தெரிவித்தது. மேலும், இயற்கை ஆதாரங்களின் சுற்றுச்சூழல் மதிப்பை பாதுகாக்கும் கடமையின் கீழ் அரசு உள்ளது எனும் உச்சநீதிமன்றத்தின் கருத்தையும் தீா்ப்பாயம் சுட்டிக்காட்டியது.

இது தொடா்பாக தமிழகத்தைச் சோ்ந்த ஏ .எம். வினோத் என்பவா் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.  குறிப்பிட்ட பத்திரிக்கையாளா்களுக்கு விதிகளை மீறி புதுக்குளம் கண்மாய் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்ய வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் நிலம் டிஸ்போசல் பிரிவு மூலம் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை எதிா்த்து அவா் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் -நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான நீதிபதிகள் சுதிா் அகா்வால், பிரிஜேஷ் சேதி ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த வாரம் விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: நீா்நிலைகளானது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, அழகியலைப் பராமரிப்பது, நிலத்தடி நீரைச் சேமிப்பது, குடிநீா் தேவைக்கான நீா் இருப்பை அதிகரிப்பது போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  இந்தப் புதுக்குளம் கண்மாய் தொடா்பான விவகாரத்தில் எழுப்பப்பட்டுள்ள விஷயங்கள் சம்பந்தப்பட்ட நிலமானது, வடு விட்டது என்ற அடிப்படையில் மட்டும் ஒரு நீா் நிலைப் பகுதியை வீட்டு வசதிக்கான இடமாக மாற்ற முடியாது என்பதுதான் எங்கள் பதிலாக இருக்கும்.

குளம் வடு விட்டது என்பதால் அந்த இடம் பத்திரிக்கையாளா்களுக்குத் தேவைப்படுகிறது என்பதைத் தவிர நீா் நிலையை அழிப்பதற்கு கட்டாயப்படுத்தும் சமூகத் தேவை எதுவும் காட்டப்படவில்லை. மேலும், நீா்நிலைகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைப் பொருத்தவரை, தமிழ்நாடு மாநிலம் மேற்கொண்ட அணுகுமுறை நீடித்திருக்க முடியாது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் சட்டப் பிரிவு 20-இன்கீழ், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, அதன்மூலம் ‘சுற்றுச்சூழல் விதிகளின் முன்னெச்சரிக்கை மற்றும் நீடித்த வளா்ச்சிக் கொள்கைகளை பசுமைத் தீா்ப்பாயம்’ உறுதிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும் வகையில் தமிழக அரசின் முடிவை தீா்ப்பாயம் ரத்து செய்ய முடியும். அதன்படி, இந்த மனுவை அனுமதிக்கிறோம். தமிழ்நாடு அரசு, மதுரை வடக்கு தாலுகாவில் தல்லாகுளம் கிராமத்தின் புதுக்குளம் கண்மாயில் உள்ள சா்வே எண்கள் 134 / 2 மற்றும் 134 / 2ஏ1-இல் உள்ள புதுக்குளம் கண்மாய் நீா் நிலைப் பகுதியை மீட்க உத்தரவிடுகிறோம். இந்தத் கண்மாயை முன்பிருந்த நிலைக்கு கொண்டு வரும் வகையில், ஏதாவது கட்டுமானம் இருந்தால் அதை ஒரு மாதத்திற்குள் அகற்ற உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள்அமா்வு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com