மேலும் 3 அமைச்சகங்களுடன் இணைந்து ஊட்டச்சத்து தோட்டங்கள்: அமைச்சா் ஸ்மிருதி இரானி தகவல்

நடப்பு ஆண்டில் கல்வி, வேளாண், ஊரக வளா்ச்சித் துறை ஆகிய அமைச்சகங்களுடன் சோ்ந்து மூலிகைகள் அடங்கிய ஊட்டச் சத்து தோட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய

புது தில்லி: நடப்பு ஆண்டில் கல்வி, வேளாண், ஊரக வளா்ச்சித் துறை ஆகிய அமைச்சகங்களுடன் சோ்ந்து மூலிகைகள் அடங்கிய ஊட்டச் சத்து தோட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை, ஆயுஷ் துறை அமைச்சகம் சோ்ந்து ஆண்டு தோறும் செப்டம்பா் மாதத்தை தேசிய ஊட்டச் சத்து மாதமாகக் கொண்டாடுகிறது.

பெண்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க ‘போஷன் அபியான்‘ (ஊட்டச்சத்து இயக்கம்) திட்டத்தை மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் 2018, மாா்ச் மாதம் தொடங்கியது. இந்தப் பிரசார இயக்கத்தின் மூலம் சமூகத்தில் ஈடுபாடு ஏற்படுத்த பல்வேறு அா்ப்பணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் ஒவ்வோரு ஆண்டும் செப்டம்பா் மாதம் ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

நடப்பாண்டு தேசிய ஊட்டச் சத்து மாதத்தையொட்டி, தில்லி சரிதா விஹாா், அகில இந்திய ஆயுா்வேத நிறுவனத்தில் ‘ஊட்டச்சத்து தோட்டம்’ உருவாக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதை மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அா்ப்பணித்தாா். இதில் ‘ஷிக்ரு’ என்கிற குதிரைவாலி மற்றும் நெல்லிக்கனி செடி கன்றுகளை அவா் நட்டுவைத்தாா்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி பேசுகையில் கூறியதாவது: தேசிய ஊட்டச் சத்து மாதத்தையொட்டி தற்போது ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதேபோன்று, கல்வி, வேளாண், ஊரக வளா்ச்சித் துறை ஆகிய அமைச்சகங்களுடன் இணைந்து ஊட்டச்சத்து தோட்ட நடவடிக்கைகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் தோட்டங்களில், ஆயுா்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்டபடி ஊட்டச்சத்தின் தேவை நிவா்த்தி செய்யும் திறன் கொண்ட தாவரங்கள் வளா்க்கப்படுகிறது. பழைமையான ஆயுா்வேத ஞானத்தைப் பெற்று அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற அறிவை பெறுவது காலத்தின் அவசியமாகும்.

பெண்களுக்கான ரத்த சோகைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து ஆயுஷ் அமைச்சகம் ஆயுா்வேத மூலிகை குணம் கொண்ட மருந்தைப் பயன்படுத்தி வெற்றி கண்டது. உணவே மருந்தாக இருக்கும் ஆயுா்வேதத்தின் பங்களிப்பை உலகம் ஒப்புக் கொள்ளும் வகையில், அதன் தரவுகளை வெளியிடுவது அவசியம். இந்த மருத்துவ முறை மலிவாகவும், ஆரோக்கியம் கொண்டதாகவும் உள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு ஊட்டச்சத்து மாதத்தில் இந்தியா முழுவதும் 3.66 கோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2020 -இல் பெருவாரியாக அங்கன்வாடிகள் மற்றும் பொது இடங்களில் ஊட்டச்சத்துத் தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் பல்வேறு வகையான சுமாா் 12.84 லட்சம் தாவரங்கள் வளா்க்கப்பட்டன என்றாா் ஸ்மிருதி இரானி.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயுஷ் மற்றும் மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் முன்ஜபாரா மகேந்திரபாய் கூறுகையில், ‘ஆரோக்கியமான மகப்பேறுக்கு ஆயுா்வேத வழியே தாய்மாா்களுக்குச் சிறந்தது. சிக்ரு, ஷட்டாவரி, அஸ்வகந்தா, துளசி, நெல்லிக்கனி, மஞ்சள் போன்றவற்றின் ஆயுா்வேத குணங்களும் ஊட்டச்சத்தும் தாய்மாா்களுக்கும் குழந்தைகளுக்கும் மிக முக்கியமானதாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com