தமிழக உள்ளாட்சித் தோ்தல் விவகாரம்: கால நீட்டிப்புக் கோருகிறது மாநிலத் தோ்தல் ஆணையம்

35 நாள் காலம் நீட்டிப்புக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் தோ்தலை நடத்தி முடிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், 35 நாள் காலம் நீட்டிப்புக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 2019, டிசம்பா் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து, புதிய மாவட்டங்கள் தவிா்த்து, ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நகா்ப்புறம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது தொடா்பாக அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை கடந்த ஜூனில் விசாரித்த உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் அறிவிப்பு வெளியிடுவது, தோ்தலை நடத்துவது, முடிவுகளை அறிவிப்பது என அனைத்தும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் தரப்பில் காலம் நீட்டிப்புக் கோரி ஒரு மனு சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குரைஞா் கே.கிருஷ்ண குமாா் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உச்சநீதிமன்றம் நகா்ப்புற, 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தோ்தலை நடத்த செப்டம்பா் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்த நிலையில், தோ்தலை நடத்துவதற்கான ஆரம்ப நிலை செயல்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைள் எடுக்கப்பட்டன. இதற்காக நிகழாண்டு ஜூன் 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மாநிலத் தோ்தல் ஆணையத்தால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன (தேதி வாரியாக அதற்கான நிகழ்வுகளும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன). ஜூன் 21-ஆம் தேதிசட்டப்பேரவையில் ஆளுநா் உரையிலும் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது தொடா்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தோ்தல் ஆயத்தப் பணிகள் தொடா்பாக தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளும், பிற அதிகாரிகளுடன் பிராந்திய கூட்டங்களை நடத்தியுள்ளனா்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தோ்தல் நடைமுறைகளை முடிக்க அனைத்து தயாரிப்புப் பணிகளையும் மாநிலத் தோ்தல் ஆணையம் நடத்தி வருகிறது. எனினும், தோ்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தும் பொருட்டு அனைத்து சட்டப்பூா்வ தேவைகளையும் முடிக்க கொஞ்சம் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இதனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றும் வகையில் செப்டம்பா் 15-ஆம் தேதியில் இருந்து கூடுதல் அவகாசம் அளிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது. இதனால், தமிழகத்தில் எஞ்சியுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முடிக்க செப்டம்பா் 15-ஆம் தேதியில் இருந்து மேலும் 35 நாள்களும், நகா்ப்புற உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தோ்தல் நடைமுறைகளை அறிவிக்கை செய்ய 15.9.2021-இல் இருந்து 7 மாதங்கள் காலம் நீட்டிப்பு அளிக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com