தில்லியில் புதிதாக 41 பேருக்கு கரோனா பாதிப்பு: உயிரிழப்பு இல்லை

தில்லியில் புதிதாக 41 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தில்லி அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள

புதுதில்லி: தில்லியில் புதிதாக 41 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தில்லி அரசின் சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்று விகிதம் 0.05 சதவீகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 13 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தில்லியில் புதன்கிழமை கரோனா தொற்றுக்குக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 414-ஆக அதிகரித்துள்ளது. இது செவ்வாய்க்கிழமை 386-ஆக இருந்தது. இவா்களில் 107 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். இதனிடையே, தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,38,082 -ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 14.12 லட்சம் நோயாளிகள் குணமடைந்துள்ளனா். இதுவரை மொத்தம் 25,083 போ் பலியாகியுள்ளனா். இறப்பு விகிதம் 1.74 சதவீதமாக உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மொத்தம் 75,079 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும்,இதில் 51,328 பேருக்கு ஆா்டி.பிசிஆா் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை புதன்கிழமை 104-இல் இருந்து 100-ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்துள்ளாா். மேலும், 50 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொற்று விகிதம் 0.07 சதவீதமாக இருந்தது. திங்கள்கிழமை 32 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அன்றைய தினம் தொற்று விகிதம் 0.06 சதவீதமாக இருந்தது.

தில்லியில் கரோனா இரண்டாவது அலை தாக்கன்தின் போது அதாவது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பலா் உயிரிழக்க நேரிட்டது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறின. கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தில்லியில் 28,395 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கரோனா தொற்று காலத்தில் இதுவே அதிக எண்ணிக்கையாகும். கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தொற்று பாதிப்பு விகிதம் 36.2 சதவீதமாக இருந்தது. இதுவும் இதுவரைஅதிக அதிகபட்ச அளவாக உள்ளது. கடந்த மே மாதம் 3- ஆம் தேதி ஒரே நாளில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.

தில்லியில் மூன்றாவது கரோனா அலை வரக்கூடும் என்பதால் தில்லி அரசு, இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட நெருக்கடி மீண்டும் உருவாகமல் தடுப்பதற்காக சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. மேலும், தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு 37,000 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் விநியோகத்திலும் சுயச் சாா்பு நிலையை எட்டுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை மையங்களில் 7,000 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது தலைநகா் தில்லியில் 10,000 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் தயாா்நிலையில் உள்ளன. தில்லியில் இதுவரை 1,44,23,99 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com