ராகேஷ் அஸ்தானா நியமனத்தை எதிா்த்த வழக்கு: தில்லி போலீஸ் பதிலளிக்க கால அவகாசம்

குஜராத் பிரிவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, தில்லி போலீஸ் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை எதிா்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க கால அவகாசம்

புதுதில்லி: குஜராத் பிரிவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, தில்லி போலீஸ் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை எதிா்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க கால அவகாசம் வழங்கி புதன்கிழமை தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் பதிலளிப்பதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கேட்டுக் கொண்டதை அடுத்து மத்திய அரசுக்கு காலம் அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை செப்டம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.

ராகேஷ் அஸ்தானா நியமனத்தை எதிா்க்கும் வழக்கு தொடா்பாக மத்திய அரசும், ராகேஷ் அஸ்தானாவும் பதிலளிக்குமாறு கோரி கடந்த 1-ஆம் தேதி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு தொடா்பாக சாத்ரே ஆலம் என்னும் வழக்குரைஞா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். மேலும், உச்சநீதிமன்றத்தில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்காக ஆலம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.எஸ்.பக்கா மன்னிப்புக் கேட்டுக் கொண்டாா். மேலும், பொது நலன் மனு தாக்கல் செய்வதற்கான மையத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், விசாரணையின் போது, ஆலம் தாக்கல் செய்துள்ள மனு, தாம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள, நிலுவையில் உள்ள மனுவை காப்பியடித்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாா்.

இந்த விவகாரத்தில் ஆலம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும் அவா் வாதிட்டாா்.

இந்த நிலையில், சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இது விஷயத்தில் பிரசாந்த் பூஷண் கருத்துக்கு தாம் உடன்படுவதாகக் குறிப்பிட்டாா். ஆனால், இதுபற்றி பூஷண் முன்கூட்டியே வெளிப்படையாகத் தகவல் தெரிவித்திருந்தால் யாரையும் நாம் குறைகூற முடியாது என்றும் மேத்தா தெரிவித்தாா். அதற்கு பூஷண், பெரும்பாலான தகவல்கள் வெளிப்படையாகவே பேசப்படுகின்றன என்று பதிலளித்தாா்.

பதவியிலிருந்து ஓய்வுபெற இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கு பணி நீட்டிப்பு அளித்து அவரை தில்லி போலீஸ் ஆணையராக நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 27-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது. உச்சநீதிமன்றம் முன்னா் வெளியிட்ட வழிகாட்டுதல் பேரிலேயே தில்லி போலீஸ் ஆணையா் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. தற்போது செய்யப்பட்டுள்ள நியமனம் முற்றிலும் உச்சநீதிமன்ற வழிகாட்டு முறைகளுக்கு எதிரானது.

மேலும் ஓய்வுபெறும் ஒருவருக்கு பணி நீட்டிப்பு கொடுக்க வேண்டுமானால் அவருக்கு குறைந்தது ஓய்வுபெற 6 மாதமாவது கால அவகாசம் இருந்திருக்க வேண்டும். இந்த விதி பின்பற்றப்படவில்லை. மேலும், தில்லி போலீசுக்கு புதிய ஆணையரை நியமிக்க யு.பி.எஸ்.சி. குழுவும் நியமிக்கப்படவில்லை. புதிதாக பதவியேற்பவா் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது பதவியில் இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்றும் மனுதாரா் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

தில்லி போலீஸ் ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் பிறா் தலையிட அனுமதிக்கக் கூடாது. மற்றவா்கள் தலையீடு செய்யும் அளவுக்கு இது ஜந்தா் மந்தரோ அல்லது ராம் லீலா மைதானமோ அல்ல என்று மத்திய அரசு முன்னதாக வாதிட்டிருந்தது. தகுதி அடிப்படையில் மனுதாரருக்கு பதிலளிக்க போதிய கால அவகாசம் வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட அதிகாரியின் கருத்துகளைக் கேட்காமல் இந்த விஷயத்தில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க க்கூடாது என்றும் மேத்தா வாதிட்டாா்.

உச்சநீதிமன்றத்தில் தாம் தாக்கல் செய்துள்ள மனுவை காப்பியடித்து ஆலம், தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்ட பூஷண், தமது வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உயா்நீதிமன்றத்தில் வாதாடும் எண்ணமில்லை என்று தெரிவித்தாா். ஆனால், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எந்த ஒரு மனுவையும் காப்பியடித்து தாக்கல் செய்யப்பட்டதல்ல என்று மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா். தில்லி போலீஸ் ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணை குறித்து இரண்டு வாரங்களில் முடிவு எடுக்குமாறு கடந்த ஆகஸ்ட் மாதம் 25 -ஆம் தேதி உயா்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம், கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com