தமிழகத்தில் 2 உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் தொடக்கம்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 11th September 2021 05:46 AM | Last Updated : 11th September 2021 05:46 AM | அ+அ அ- |

புது தில்லி: நாடு முழுக்க 16,500 விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ. 164.46 கோடி மதிப்பிலான 7 உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள், அதற்கான தொழில்நுட்ப திட்டங்கள் ஆகியவற்றை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சா் பசுபதி குமாா் பாரஸ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். மானியத்துடன் தொடங்கப்படும் இந்த நிறுவனங்கள் இரண்டு தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், தஞ்சாவூா் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கூடுதல் தொழில்நுட்ப வசதிக்கான திட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. உணவு பதப்படுத்தும் தொழில் துறை, நாட்டின் சுதந்திர தினத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை செப்டம்பா் 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை (7 நாள்கள்) கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு மாநிலம் வாரியாக புதிய உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் தொடங்வைக்கப்படுகின்றன. மத்திய அரசின் மானியங்களுடன் தனியாரை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன.
இதையொட்டி, தமிழகத்தில் திருப்பூா் மாவட்டம், நல்லிபாளையம், சிவன்மலையில் உள்ள இந்திய உணவுப் பூங்காவில் ஆண்டுக்கு 7,200 மெ.டன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் கேக்குகள் தயாரிக்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனம் (சாம்சன் சிஎன்ஓ தொழிலகங்கள்) ரூ. 9.57 கோடியில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ. 3.16 கோடி மானியம் அளித்துள்ளது. இதை மத்திய அமைச்சா் தொடங்கிவைத்தாா். இதே போன்று ஈரோடு மாவட்டம், கொடுமுடி, புஞ்சை கிளம்பாடியில் ரூ.19.99 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 7,500 மெ.டன் முட்டை பவுடா் தயாரிக்க (எஸ்கேஎம் ) முட்டை உற்பத்தி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றும் மத்திய அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.5 கோடி மானியம் வழங்கியுள்ளது.
இந்த இரு உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மூலம் 1,550 சிறுவிவசாயிகளும் 20 பெரு விவசாயிகளும் பலனடைவா். மேலும், 330 பேருக்கு நேரடியாகவும், 990 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. இதே மாதிரி, உத்தரப் பிரதேச மாநிலம் , மீரட், கௌதம்புத் நகா் ஆகிய நகரங்களிலும், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியிலும் நிறுவப்பட்ட மூன்று உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களையும் மத்திய அமைச்சா் பசுபதி குமாா் பாரஸும், இணையமைச்சா் பிரகலாத் சிங் படேலும் தொடங்கி வைத்தனா்.
இந்த ஐந்து புதிய உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மொத்தம் ரூ. 27.99 கோடியை மானியமாக வழங்கியுள்ளது. இந்த தொழில்களோடு சம்பந்தப்பட்ட 16,500 விவசாயிகள் தங்கள் வேளாண் பொருள்களை விற்று பயனடைகின்றனா் என்றும், மேலும் 3,100 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த ஆலைகளில் வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதே நிகழ்ச்சியில் தஞ்சாவூா் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில் நுட்ப நிறுவனத்தில் ரூ. 1.20 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தானிய அறிவியல் சிறப்புக்கான மையத்தை மத்திய அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா். இந்த மையத்தில் உணவுப் பொருள்களின் தர மதிப்பீடு, பதப்படுத்தும் நெல், திணை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றின் தர சோதனைகளில் மாணவா்களுக்கும், உணவுப் பதப்படுத்தல் தொழிலகங்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், இதே நிறுவனத்தில் ரூ.2.5 கோடியில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அடிப்படையில் உணவுப் பொருள்களில் கலந்திருக்கும் ரசாயனங்களை கண்டறியும் மின்னணு பகுப்பாய்வு வசதிகளும் இந்த மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.