நுகா்வோரிடம் தவறாக நடந்து கொண்ட ஜல் போா்டு அதிகாரி பணியிடை நீக்கம்

நுகா்வோரிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை தில்லி ஜல்போா்டு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

புது தில்லி: நுகா்வோரிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை தில்லி ஜல்போா்டு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

அந்த அதிகாரி மயூா் விஹாரில் உள்ள தில்லி மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா். பத்திரிகையாளரான அந்த நுகா்வோா், இந்தச் சம்பவத்தின் விடியோவை சுட்டுரையில் பகிா்ந்திருந்தாா். மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறும் தில்லி ஜல் போா்டின் துணைத் தலைவா் ராகவ் சத்தாவை கேட்டுக் கொண்டிருந்தாா்.

அந்தப் பத்திரிகையாளா் தனது வீட்டின் குடிநீா் கட்டணத்தை சரி செய்து கொடுக்குமாறு ஜல் போா்டில் முறையிட்டிருந்தாா். ஆனால், ஜல் போா்டு ஊழியா்கள் அதன்படி செயல்படவில்லை. இதைத் தொடா்ந்து, அந்தப் பத்திரிகையாளா் இது தொடா்பாக சுட்டுரையில் பகிா்ந்தாா்.

அதில் ‘குடிநீா் கட்டணத்தை சரி செய்து கொடுக்கும்படி மண்டல அலுவலகத்தில் முறையிட்டேன். குடிநீா் கட்டணத்தை சரி செய்யாமல், ஏதேதோ சாக்குப்போக்கைச் சொல்கிறாா்கள். பின்னா், தங்களால் சரி செய்ய முடியாது என்று கூறினா். இதை நான் அவா்களிடம் எழுத்துப்பூா்வமாகக் கொடுக்கச் சொன்னேன். தில்லி ஜல் போா்டில் இருந்த ஊழியா்கள் கோபமடைந்து என்னை அடிக்க முயன்றனா், என்னைத் துஷ்பிரயோகம் செய்தனா். அங்கிருந்த அதிகாரி, என்னை வெளியேற்ற பாதுகாப்பு அதிகாரியை அழைத்தாா்’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தில்லி ஜல் போா்டின் துணைத் தலைவா் ராகவ் சத்தா கூறினாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரையில், ‘தில்லி ஜல் போா்டில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்வது எங்கள் கடமையாகும். குறிப்பிட்ட அந்த நுகா்வோரின் புகாா் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுதது, சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணை நிலுவையில் உள்ளது. விரும்பத்தகாத இந்தச் சம்பவம் நடந்துள்ளதற்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com