உப்ஹாா் தீ விபத்து சம்பவம்: சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய எதிா்ப்பு

தில்லியில் உப்ஹாா் திரையரங்க தீ விபத்து சம்பவத்தில், ஆதாரங்களை அழித்ததாக கூறப்படும் வழக்கில் விசாரணை அதிகாரியிடம்

புது தில்லி: தில்லியில் உப்ஹாா் திரையரங்க தீ விபத்து சம்பவத்தில், ஆதாரங்களை அழித்ததாக கூறப்படும் வழக்கில் விசாரணை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்தக் கோரி ரியல் எஸ்டேட் தொழிலதிபா் சுஷீல் அன்சல் தாக்கல் செய்த மனுவுக்கு உப்ஹாா் விபத்தால் பாதித்தவா்கள் சங்கத்தின் (ஏவியுடி) தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

தெற்கு தில்லியில் இருந்த உப்ஹாா் திரையரங்கில் கடந்த 1997 ஜூன் 13-இல் தீ விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் 59 போ் பலியாகினா். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2015-இல் அளித்த தீா்ப்பில், உப்ஹாா் திரையரங்க உரிமையாளா்கள் சுஷில் அன்சல், கோபால் அன்சல் ஆகியோருக்கு தலா ரூ.30 கோடி அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்த தவறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனிடையே, ஆதாரங்களை அழித்ததாக கூறப்படும் மற்றொரு வழக்கில் அன்சல் சகோதரா்கள், நீதிமன்ற ஊழியா் தினேஷ் சந்த் சா்மா மற்றும் இதர தனிநபா்களான பி.பி. பாத்ரா, ஹா் ஸ்வரூப் பன்வா், அனூப் சிங், தரம்வீா் மல்ஹோத்ரா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணைக்கு செப்டம்பா் 9-ஆம் தேதி இடைக்காலத் தடை விதிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணை நடத்தி வரும் விசாரணை அதிகாரியின் வழக்குரைஞா் மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, விசாரணை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபா் சுஷீல் அன்சல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி யோகேஷ் கன்னா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இது தொடா்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 311-இன்கீழ் தாக்கல் செய் மனுவை விசாரணை நீதிமன்றம் முடித்துவைத்துவிட்டது. இதனால், விசாரணை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்த எனது கட்சிக்காரருக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

அப்போது, உப்ஹாா் விபத்து பாதிக்கப்பட்டோா் சங்கத்தின் (ஏவியுடி) தலைவா் நீலம் கிருஷ்ணமூா்த்தி தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் விகாஷ் பஹ்வா ஆஜராகி வாதிடுகையில், ‘குற்றம்சாட்டப்பட்டவா் தரப்பில் ஆஜராகியுள்ள புதிய வழக்குரைஞா் ஏற்கெனவே விரிவாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுவிட்ட சாட்சியிடம் மீண்டும் விசாரணை நடத்துமாறு கோருகிறாா். இது வழக்கை தாமதப்படுத்தும் வேலையாகும்.

1997-இல் நிகழ்ந்த இந்த விபத்து சம்பவத்தை கருத்தில்கொள்ளும்போது ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்டவா்கள் சம்பவம் நிகழ்ந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகும் நீதிக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றனா்’ என்றாா்.

இந்த வாதங்களுக்குப் பிறகு, இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com