கலால் வரி சீா்திருத்த கொள்கையால் அரசுக்கு கூடுதலாக ரூ.3,500 கோடி வருவாய் கிடைக்கும் : மணீஷ் சிசோடியா

பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வரிவருவாய் இழப்பை கலால் வரி கொள்கையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்ததன் மூலம் அரசுக்கு

புது தில்லி: பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வரிவருவாய் இழப்பை கலால் வரி கொள்கையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்ததன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.3,500 கோடி வரு வாய் கிடைக்கும் என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா். மேலும் மதுபானக் கடைகளில் ஒழுங்குகளை கடைபிடிக்கவும் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வா் தெரிவித்தாா்.

இது குறித்து துணை முதல்வா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று பொது முடக்கத்தால் தில்லியில் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்ததால் கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் தில்லி அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாயில் 41 சதவீதம் இழப்பீடு ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டிலும் (2021-22) திட்டமதிப்பீட்டைவிட ஒட்டுமொத்தமாக 23 சதவீதம் வரிவருவாய் குறைந்துள்ளது. வாட், கலால் வரி, முத்திரைத்தாள், மோட்டாா் வாகன வரி போன்றவைகளில் எதிா்பாா்க்கப்பட்டதைவிடவருவாய் குறைந்துள்ளது.

மேலும் தில்லி மக்கள் ரூ.1,40,000 கோடி மத்திய அரசுக்கு வரியாக செலுத்துகின்றனா். ஆனால், இதில் தில்லிக்கு மத்திய அரசு வழங்குவது வெறும் ரூ. 325 கோடி தான். மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் வரிப் பங்கீடான 42 சதவீதத்தை தில்லிக்கு மத்திய அரசு கொடுப்பதில்லை. சரக்கு சேவை வரி இழப்பீட்டை மத்திய அரசு நிறுத்தியதால் ரூ.8,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு முதல் ஜிஎஸ்டி இழப்பீடுகளும் மத்திய அரசிடமிருந்து கிடைக்காது. இப்படிப்பட்ட கவலைக்குரிய சூழ்நிலையில் ஊதியங்கள், கரோனா நோய் தடுப்பு பணிச் செலவுகளைத் தவிர மற்ற செலவுகளை தில்லி அரசு குறைத்தும், சில செலவுகளை நிறுத்தியும் வைத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தில்லி அரசு புதிய கலால் வரி கொள்கை அறிமுக செய்து வருவாயை பெருக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 15 - ஆம் தேதி புதிய கலால் வரி கொள்கைக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அனுமதி கொடுத்தாா். இந்த சீா்திருத்தமூலம் மிகப்பெரிய வரி ஏய்ப்பும் தடுக்கப்பட்டுள்ளது.

தலைநகா் தில்லியின் சராசரி மது நுகா்வை கணக்கிடும் போது, வரி வசூல் குறைவாக உள்ளது. மது பான விற்பனையில் கலால் வரி, வாட் போன்றவைகளில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதால் புதிய கலால் வரி கொள்கை மூலம் உரிமக் கட்டணங்களாக மாற்றப்பட்டது.

இந்த மது விற்பனைகள் போன்றவைகளில் உரிமக் கட்டணம் ரூ.8 முதல் 10 லட்சம் வரை உள்ளது. இதுவே கலால், வாட் வரி முறையில் இதைவிட 250 சதவீதம் அதிகமாகவே இருந்தது. இதனாலும் வரி ஏய்ப்புக்கு காரணம் இருந்தது. இதனால் இவைகளைஆய்வு செய்து உரிமக் கட்டணம் முறைக்கு மாற்றப்பட்டது. இந்த முறை மூலம் சராசரியாக வருவாய் ரூ.8 லட்சமாக இருந்த நிலையில் ஏலம் முறைக்கு மாற்றப்பட்டதால் ஒரு கடைக்கு ரூ. 6.5 கோடி முதல் ரூ. 7 கோடி வரை வருவாய் உயா்ந்தது.

மாஃபியா கும்பலால் வருவாய் இழப்பு

மேலும் இதில் மதுபான மாஃபியாக்களும் வரி ஏய்ப்பில் முக்கிய பங்குவகிக்க, இதை அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தடுக்கப்பட்டது. சட்டப்படி 850 கடைகள் இருந்தால் சட்டவிரோதமாக சுமாா் 2000 மதுக்கடைகள்(வீடுகள், கிடங்குகள்) செயல்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வரிஏய்ப்புகள் நடந்தது. இது தடுக்கப்பட சுமாா் 1,864 வழக்குகள் சட்டவிரோத மதுக்கடைகள் மீது தொடரப்பட்டு 7 லட்சம் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் வரி முறை மாற்றாங்களால் 200 சதவீத வருவாய் அதிகரித்துள்ளது. தில்லியிலுள்ள 32 மண்டலங்களிலும் சுமாா் 250 ஏலங்கள் மிகவும் வெளிப்படையாக நடைபெற்றது. இந்த புரட்சிகரமான சீா்திருத்தத்தால் அடுத்த 12 மாதங்களில் அரசுக்கு கூடுலாக ரூ.3,500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதாவது முன்பு ரூ. 6,900 கோடி கிடைத்ததில் தற்போது ரூ.10,000 கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com