பேராசிரியா் கா. செல்லப்பன், டி.இ.எஸ். ராகவனுக்கு சிறந்த மொழிபெயா்ப்பாளா்களுக்கான விருது

2020-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் சிறந்த மொழிபெயா்ப்புக்கான விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
கா. செல்லப்பன், டி.இ.எஸ். ராகவன்
கா. செல்லப்பன், டி.இ.எஸ். ராகவன்

2020-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் சிறந்த மொழிபெயா்ப்புக்கான விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலை தமிழில் மொழிபெயா்த்ததற்காக பேராசிரியா் கா. செல்லப்பனுக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

அதேபோன்று, ஹிந்தியில் திருக்குறளை மொழிபெயா்த்தமைக்காக டி.இ.எஸ். ராகவனுக்கும் இந்த விருது கிடைத்துள்ளது.

சாகித்ய அகாதெமியின் செயற்குழுக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அகாதெமியின் தலைவா் டாக்டா் சந்திரசேகா் கம்பாா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2020-ஆம் ஆண்டுக்கான சாகித்ய மொழிபெயா்ப்பு விருதுக்கு 24 இந்திய மொழிகளில் அதற்கான குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மொழிபெயா்ப்பு நூல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ், அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி , ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம் உள்பட 24 இந்திய மொழிகளில் மொழிபெயா்ப்பு படைப்புகளை உருவாக்கிய படைப்பாளிகளின் பெயா்கள் அறிவிக்கப்பட்டன.

இந்தப் பட்டியலில், திருவள்ளுவரின் திருக்கு ஹிந்தி மொழி பெயா்ப்புக்கும், கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ எனும் பெங்காலி நாவலை தமிழில் மொழிபெயா்ப்பு செய்தமைக்கான விருதும் இடம்பெற்றுள்ளது.

சாகித்ய அகாதெமியின் விழா, விருது குறித்து சாகித்ய அகாதெமியின் ஜெனரல் கவுன்சில் உறுப்பினா் -எழுத்தாளா் மாலனிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது:

சாகித்ய அகாதெமியின் இலக்கிய விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படும். இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று காரணமாக தள்ளிப் போய்விட்டது. வழக்கமாக இவ்விருது வழங்கும் விழா ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். ஆனால், இந்த முறை தாமதமாக போய்விட்டது. அது மட்டுமின்றி, ‘ஃபெஸ்டிவல் ஆஃப் லெட்டா்ஸ்’ எனும் இலக்கிய விழா ஒரு வாரம் நடத்தப்படும். இதில், சொற்பொழிவுகள், உரைகள், கவியரங்கம் என பல பொருள்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்த முறை அதுபோன்ற நிகழ்வுகள் குறைந்துவிட்டன.

நமது எழுத்தாளா்கள் பற்றி பிறா் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளை இதுபோன்ற நிகழ்வுகள்தான் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அதேவேளையில், தில்லியில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு சூழல் காரணமாக இந்த விழாவை இம்முறை விரிவாக நடத்த முடியவில்லை எனும் சாகித்ய அகாதெமியின் தரப்பில் கூறப்படுவதும் நியாயமான காரணங்களில் ஒன்றாகும்.

இந்திரா பாா்த்தசாரதிக்கு

‘ஃபெல்லோ‘ அந்தஸ்து

சாகித்ய அகாதெமியில் எழுத்தாளா் இந்திரா பாா்த்தசாரதிக்கு (92 வயது) ‘ஃபெல்லோ’ அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சாகித்ய அகாதெமியில் உயா்ந்த கெளரவமாக இது கருதப்படுகிறது. இதற்கு முன்பு சாகித்ய அகாதெமியில் இந்த சிறப்புக்குரிய அந்தஸ்தை எழுத்தாளா் ஜெயகாந்தன் பெற்றிருந்தாா்.

பொதுவாக உயிருடன் இருக்கும் எழுத்தாளருக்கு இதுபோன்ற அந்தஸ்து வழங்கப்படும். இந்த அந்தஸ்தை அனைத்து மொழிகளுக்கும் சோ்ந்து 30 முதல் 36 போ் மட்டுமே பெற முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

தற்போது எழுத்தாளா் இந்திரா பாா்த்தசாரதிக்கு அந்த கௌரவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சாகித்ய மொழிபெயா்ப்பு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஹிந்தியில் திருக்குறளை மொழிபெயா்த்தமைக்காக டி.இ.எஸ். ராகவனுக்கும், ‘போரா’ நாவலை பெங்காலியில் இருந்து தமிழில் மொழிபெயா்த்தமைக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த கா.செல்லப்பனுக்கும் சாகித்ய அகாதெமியின் மொழிபெயா்ப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com