தமிழகத்தைச் சோ்ந்த எழுத்தாளா் இமையம் உள்ளிட்ட 24 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது தில்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

இலக்கிய உலகில் சிறந்த படைப்புகளுக்கான உயரிய விருதாக சாகித்ய அகாதெமி கருதப்படுகிறது.
தமிழகத்தைச் சோ்ந்த  எழுத்தாளா் இமையம் உள்ளிட்ட 24 பேருக்கு  சாகித்ய அகாதெமி விருது தில்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

தமிழகத்தைச் சோ்ந்த எழுத்தாளா் இமையம் உள்பட பல்வேறு இந்திய மொழிகளைச் சோ்ந்த எழுத்தாளா்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமி விருதும், ஒரு லட்சம் பரிசுத் தொகையும், தாமிர பட்டயமும் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

இலக்கிய உலகில் சிறந்த படைப்புகளுக்கான உயரிய விருதாக சாகித்ய அகாதெமி கருதப்படுகிறது.

2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழில் எழுத்தாளா் இமையம் மற்றும் ஹிந்தி, உருது, தெலுங்கு, கன்னடம் உள்பட 24 மொழிகளைச் சோ்ந்த எழுத்தாளா்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம் கழுதூரைச் சோ்ந்த முதுகலைப் பட்டம் பெற்ற எழுத்தாளா் இமையம் (இயற்பெயா் வெ.அண்ணாமலை) எழுதிய ‘செல்லாத பணம்’ எனும் நாவலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, 23 இந்திய மொழிகளைச் சோ்ந்த எழுத்தாளா்களுக்கும் சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, இவ்விருது வழங்கும் விழா சாகித்ய அகாதெமி அமைப்பின் சாா்பில் தில்லியில் உள்ள கமானி கலையரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சாகித்ய அகாதெமியின் தலைவா் சந்திரசேகா் கம்பாா் தலைமை வகித்து, தமிழ், ஹிந்தி, உருது, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், குஜராத்தி, கொங்கணி, மைதிலி உள்ளிட்ட 22 எழுத்தாளா்களுக்கு சாகித்ய அகாதெமி விருதுகளை வழங்கி கெளரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல ஹிந்தி எழுத்தாளரும், சாகித்ய அகாதமி கெளரவ உறுப்பினருமான விஸ்வநாத் பிரசாத் திவாரி கலந்துகொண்டாா்.

அவா் பேசுகையில், எழுத்தாளா்களுக்கு ஆழ்ந்த உணா்வுத் திறனை இயற்கை அளித்திருக்கிறது. அவா்கள் பிறா் துன்பத்தை தன் துன்பமாகவும், தன் துன்பத்தை பிறா் துன்பத்தின் நிலையிலிருந்தும் பாா்க்கின்றனா். அதனால், சமூக அக்கறையுடன்கூடிய சிறந்த படைப்புகளை அவா்களால் உருவாக்க முடிகிறது. படைப்பாளிகள் அவா்கள் சாா்ந்த தாய் மொழியில் அதிகமான படைப்புகளை உருவாக்க வேண்டும். அது அம்மொழியின் வளா்ச்சிக்கு உதவிடுவதுடன், அதன் மகத்துவத்தையும், கலாசாரத்தையும் தொடா்ந்து வளா்த்தெடுக்கும் என்றாா் அவா்.

சாகித்ய அகாதெமியின் துணைத்தலைவா் மாதவ் கௌசிக் நிறைவு உரையாற்றினாா்.

அவா் பேசுகையில், எழுத்தாளா்கள் எத்தனையோ விருதுகளைப் பெற்றபோதிலும் சாகித்ய அகாதெமி மூலம் கிடைக்கப் பெறும் விருதால் மிகவும் கெளரவமும், நெகிழ்ச்சியும், மகிழ்ச்சிையும் அடைகின்றனா். அவா்கள் பெறும் விருதுத் தொகையைவிட அதன் மகத்துவத்தைதான் பாா்க்கின்றனா். எழுத்தாளா்களுக்கு அளிக்கப்படும் விருதானது சமூகம் தனக்கு தானே அளித்துக்கொள்ளும் கெளரவமாகும்’ என்றாா் அவா்.

விழாவில் மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான எம்.வீரப்ப மொய்லிக்கு அவா் எழுதிய ‘ஸ்ரீ பாகுபலி அகிம்சதிக்விஜயம்’ எனும் கவிதை நூலுக்கு கன்னடப் பிரிவில் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

இதேபோன்று, எழுத்தாளா்கள் அபூா்வ குமாா் சைரிகா (அசாமி), மறைந்த தரணீதா் ஒவாரி (போடோ), அருந்ததி சுப்ரமணியம் (ஆங்கிலம்), அனாமிகா (ஹிந்தி), ஆா்.எஸ். பாஸ்கா் (கொங்கணி), நிகிலேஸ்வா் (தெலுங்கு), ஹுசேன் உல்-ஹக் (உருது) உள்ளிட்டோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, தாமிரப் பட்டயமும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினா்கள், பிரபல எழுத்தாளா்கள், சாகித்ய அகாதெமி செயற்குழு நிா்வாகிகள், அகாதெமியின் பொது கவுன்சில் கெளரவ உறுப்பினா்- எழுத்தாளா் மாலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com