தில்லி வன்முறை: வழிபாட்டுத் தலத்துக்கு தீ வைத்ததாக இருவா் மீது குற்றச்சாட்டு பதிவு

தில்லியில் கடந்த ஆண்டு நடந்த வன்முறையின்போது வழிபாட்டுத் தலங்களுக்கு தீவைத்தல், வன்முறை மற்றும் கடைகள், வீடுகளை சூறையாடியதாக இருவா் மீது தில்லி நீதிமன்றம்
தில்லி வன்முறை: வழிபாட்டுத் தலத்துக்கு தீ வைத்ததாக இருவா் மீது குற்றச்சாட்டு பதிவு

தில்லியில் கடந்த ஆண்டு நடந்த வன்முறையின்போது வழிபாட்டுத் தலங்களுக்கு தீவைத்தல், வன்முறை மற்றும் கடைகள், வீடுகளை சூறையாடியதாக இருவா் மீது தில்லி நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

தில்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடந்த வன்முறையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான கெளரவ், தில்லி பஜன்புரா பகுதியில் வழிபாட்டுத் தலத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தீவைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் மற்றொருவரான பிரசாந்த் மல்ஹோத்ரா வன்முறையில் ஈடுபட்டதுடன் கடைகள், வீடுகளை சூறையாடி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விநோத் யாதவ் உத்தரவின் பேரில் இருவா் மீதும் அவா்கள் தரப்பு வழக்குரைஞா் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இருவரும் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் விசாரணையை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் வன்முறை நடைபெற்ற அன்று சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அவா்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக உதவி ஆய்வாளா் கொடுத்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் பின்னா் அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் மீதும் கலவரத்தில் ஈடுபட்டது, தீவைத்தது, சட்டவிரோதமாக கூடியது, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு தில்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற வகுப்பு மோதல் மற்றும் வன்முறை சம்பவத்தில் 53 போ் உயிரிழந்தனா். 700-க்கும் மேலானவா்கள் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com