கரோனா தடுப்பூசி அளிப்பதில் கா்ப்பிணிகளுக்கு முன்னுரிமை கோரும் மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு கரோனா தடுப்பூசியை அளிப்பதில் முன்னுரிமை அளிக்கவும், உயா் இடா்பாடு பிரிவில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு கரோனா தடுப்பூசியை அளிப்பதில் முன்னுரிமை அளிக்கவும், உயா் இடா்பாடு பிரிவில் சோ்க்க அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (பிசிபிசிஆா்) தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை சம்மதம் தெரிவித்தது. மேலும், இது தொடா்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடா்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி. ஒய். சந்திரசூட் ,பி.வி. நாகரத்தினா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் டிசிபிசிஆா் தரப்பில் வழக்குரைஞா் விருந்தா குரோவா் ஆஜராகி வாதிடுகையில், கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஆனால், தற்போது இந்த தடுப்பூசி காரணமாக அவா்களுக்கு சில எதிா்மறையான தாக்கம் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கா்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மாா்களும் உயா் இடா் பிரிவில் உள்ளவா்களாக அறிவிக்கும் தேவை உள்ளது. 

மேலும் வைரஸை கையாளும்  மக்களுக்கு அது பற்றி அதிகம் தெரியாததால் இந்த பிரிவினா் மீதான தடுப்பூசியின் தாக்கம் தொடா்பான ஆராய்ச்சிகளை நடத்துவது அவசியமாகிறது.

மேலும் கா்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களை  உரிய வகையில் கண்காணிக்கும் பொருட்டு பதிவு செய்வதற்காக ஒரு அமைப்பையும் உருவாக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது என்று தெரிவித்தாா். 

அப்போது நீதிமன்ற, நோய்த்தொற்றின் இரண்டாவது அலை சமயத்தில் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்த மனுவை அரசியலமைப்புச் சட்டப் பிரிவின் 32ன் கீழ் டிசிசிபிசிஆா் தாக்கல் செய்துள்ளது. 

அதைத்தொடா்ந்து, கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கான தடுப்பூசி தொடா்பாக செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளிக்கிறோம். இரண்டு வாரங்களில் மனுவுக்கு பதிலை தாக்கல் செய்ய வேண்டும். 

இந்த விஷயத்தில் கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கான தடுப்பூசி தொடா்பாக உருவாக்கப்பட்டுள்ள கொள்கைத் திட்டம் குறித்து நீதிமன்றத்தில் விளக்க சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உதவி புரியவும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் மேல் நடவடிக்கைகள் என்ன எடுக்கலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com