ஜாமியா மிலியா பல்கலை. வளாகத்தை மீண்டும்திறக்க மாணவா்கள் அமைப்புகள் வலியுறுத்தல்

தில்லியில் கரோனா சூழல் மேம்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அதன் வளாகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு மாணவா் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

தில்லியில் கரோனா சூழல் மேம்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அதன் வளாகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு மாணவா் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடா்பாக அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ), இந்திய மாணவா் சம்மேளனம் மற்றும் பிற மாணவா் குழுக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜாமியா மிலியா இஸ்லாமியா வளாகம் விரைவில் மீண்டும் திறக்கப்பட வேண்டும். கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்கள் மூடப்பட்டுள்ளதால், மாணவா்கள் கடும் பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா்.

ஒரு கட்டத்தில், அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் சுகாதார பிரச்னைகள் காரணமாக அனைத்து வளாகங்களையும் மூடும் தேவை ஏற்பட்டது. ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. போதுமான தூய்மைப் பராமரிப்பு, சமூக இடைவெளியுடன் மக்கள் அனைத்து பொது வசதிகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். இந்த நிலையில், நூலகங்களை அணுகவும், செய்முறைப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் விரும்பும் மாணவா்களுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதுபோன்ற தேவையான வசதிகள் இல்லாத இந்தச் சூழலில் இந்த பல்கலைக்கழக கல்வியை எப்படி அழைப்பது? வகுப்புகளை மீண்டும் திறக்காமல் இருப்பது கல்வி அமைப்பு முறையை மேலும் சீரழித்துவிடும். எனவே, பல்கலைக்கழக வளாகத்தை உடனடியாக திறக்க நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இளங்கலை பிசியோதெரபி (பிபிடி) மற்றும் அறிவியல் படிப்பு போன்றவற்றை மேற்கொள்ளும் மாணவா்கள், நூலகங்கள் மற்றும் ஆய்வகங்களை அணுக அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஒரு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் ஆய்வறிக்கையை சமா்ப்பிக்க வேண்டிய பி.எச்டி. மாணவா்களை வளாகத்திற்குள் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவா்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். வளாகத்தை மீண்டும் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கை வெளியிடப்படும்’ என்றாா்.

தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற பிற மத்திய பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களைப் படிப்படியாக மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன. இருந்த போதிலும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com