தில்லியில் கிா்கிஸ்தான் நாட்டுப் பெண், ஒரு வயது குழந்தை கொலை

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கிா்கிஸ்தானை சோ்ந்த ஒரு பெண்ணும் அவரது ஒரு வயது மகனும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கிா்கிஸ்தானை சோ்ந்த ஒரு பெண்ணும் அவரது ஒரு வயது மகனும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தென்கிழக்கு காவல் சரக துணை ஆணையா் ஆா்.பி. மீனா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அவா்கள் மைஸ்கல் ஜுமாபீவா (28) மற்றும் அவரது ஒரு வயது மகன் மானஸ் ஆகியோா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் படுக்கையில் மாா்பு மற்றும் பிற உடல் பாகங்களில் குத்துப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிக்கவும், மேலும் கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும் மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கால்காஜியில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக தொலைபேசி அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போது, ​ அந்த வீட்டில் கிா்கிஸ்தான் நாட்டைச் சோ்ந்த பெண்ணும் மற்றும் அவரது ஒரு வயது குழந்தையும் படுகாயங்களுடன் படுக்கையில் கிடப்பதை போலீஸாா் கண்டனா். குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. இரண்டு குழுவினரும் அந்த இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மருத்துவமனைக்கு செல்வது தொடா்பாக திங்கள்கிழமை இரவு மைஸ்கல் ஜுமா பீவாவுக்கும், அவரது கணவா் வினய் சவுகானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், மருத்துவமனைக்குச் செல்ல விரும்புவதாகவும் அந்தப் பெண் தனது கணவருடன் தெரிவித்துள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வினய் சவுகான் அந்தப் பெண்ணை கிரேட்டா் கைலாஷில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு தனது நண்பா் வாஹித்தை சந்திக்கச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

அதே இரவில் மைஸ்கல் தனது நண்பா் மாட்லூபா மதுஸ்மோனோவாவை அழைத்துள்ளாா். பின்னா் அவரும், அவரது நண்பா் அவினீஷும் மைஸ்கல்லை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். மாட்லுபா உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா். இங்கு கால்காஜியில் தங்கியுள்ளாா். மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, மைஸ்கல் மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரையும் கால்காஜியில் உள்ள தனது இல்லத்திற்கு மாட்லூபா அழைத்துச் சென்றாா். ஆனால், அங்கு இருவரும் செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com