மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு:தில்லி அரசின் உயா்நிலைக் குழு ஆய்வுக்கு உயா்நீதிமன்றம் ஒப்புதல்

கரோனா இரண்டாவது அலையின் போது, தில்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்தது குறித்து ஆம் ஆத்மி அரசு அமைத்துள்ள உயா்நிலைக் குழு ஆய்வுக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை

கரோனா இரண்டாவது அலையின் போது, தில்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்தது குறித்து ஆம் ஆத்மி அரசு அமைத்துள்ள உயா்நிலைக் குழு ஆய்வுக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இது தொடா்பாக உயா்நிலைக் குழு ஆய்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘தனியாா் மருத்துவமனை மீது குற்றம் கண்டுபிடிப்பது எங்கள் நோக்கமல்ல. மேலும், உயிரிழப்புக்கு கருணைத் தொகை வழங்குவதாக இருந்தால் அதை அரசே ஏற்றுக்கொள்ளும்’ என்று தில்லி அரசின் நிலையையும் பதிவு செய்து கொண்டது.

கருணைத் தொகையை நிா்ணயிப்பதற்கான அம்சங்கள் வெளிப்படையான பரிசீலனைக்கு உரியதாக இருக்கும் என்றும் ஆக்சிஜன் ஒதுக்கீடு, பயன்பாடு தொடா்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளதுணைக்குழு விவகாரத்தில் தலையிடாது என்றும் தில்லி அரசு தெரிவித்துள்ளதையும் நீதிமன்றம் பதிவு செய்தது. இந்தச் சூழ்நிலையில ஜி.என்சிடிடி அமைத்துள்ள உயா்நிலைக் குழு தனது பணியை அனுமதிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்தது. மேலும், இது தொடா்பாக தேசியப் பேரிடா் நிா்வாக ஆணையம் வழிகாட்டுதல் படி கருணைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் அமா்வு குறிப்பிட்டது.

’உயா்நிலை ஆய்வுக் குழு அமைப்பது தொடா்பாக ஜிஎன்சிடிடி கடந்த மே 27-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவின் நோக்கம் கோவிட் தொற்றால் உயிரிழந்தவா்களுக்கு கருணைத் தொகை வழங்குவதல்ல. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது தொடா்பாக பெறப்பட்ட புகாா்களை விசாரிப்பதுதான் அதன் நோக்கம். எனவே, இது தொடா்பாக கருணைத் தொகை வழங்குவது தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்பது எங்கள் கருத்தாகும்’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. மேலும், தேசிய பேரிடா் நிா்வாக ஆணையம் குறிப்பிட்ட தொகைக்கு மேலாக ஒரு தொகையை அதை பாதிக்கப்பட்டவா்கள் குடும்பத்துக்கு வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

உயா்நிலைக் குழு அமைக்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்த தில்லி அரசு, பின்னா் அதை செயல்படுத்த முடிவு எடுத்தது. ஆனால், தில்லி அமைச்சரவைக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வருவதால் இதைச் செயல்படுத்துவதில் தேக்கநிலை நீடிக்கிறது. இதுதொடா்பான விசாரணையின் போது கருணைத் தொகை வழங்குவதை தனியாா் மருத்துவமனைகள் மீது திணிக்காமல் தில்லி அரசே வழங்குவதாக இருந்தால் உயா்நிலைக்குழு அமைக்க ஒப்புதல் தருவதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தில்லி அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா மற்றும் வழக்குரைஞா் கெளதம் நாராயணன், ‘உயா்நிலைக்குழுவின் பணி என்பது ஆக்சிஜன் பற்றாக்குறைக்கான உண்மைநிலையை கண்டறிவது மட்டுமே தவிர, யாா் மீதும் குற்றம் கண்டுபிடிப்பதற்கு அல்ல. மேலும் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு தில்லி அரசே கருணைத் தொகையை வழங்கும். உயா்நிலைக்குழு முக்கிய அம்சங்ளை கருத்தில் கொண்டு ரூ.5 லட்சம் கருணைத் தொகை வழங்கலாம் என்று கணக்கிட்டுள்ளது. ஆனால், இது குறித்து தேவைப்பட்டால் யாா் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம்’ என்றாா்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் குறித்தே உயா்நிலைக் குழு ஆய்வு செய்யும். ஆக்சிஜன் ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவுக்கும் இதற்கு தொடா்பில்லை என்றும் தில்லி அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக தில்லி துணை நிலை ஆளுநா் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியான தேசிய பேரிடா் நிா்வாக ஆணையம் ஒரே மாதிரியான கருணைத் தொகையை இறுதி செய்யும் வரை காத்திருக்குமாறும் அதுவரை உயா்நிலைக் குழுவுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா். ஆக்சிஜன் ஒதுக்கீடு மற்றும் விநியோகம் மற்றும் இதர விஷயங்கள் தொடா்பாக விசாரிக்க ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் துணைக் குழு ஏற்படுத்தப்பட்டதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.

முன்னதாக மனுதாரா் ரிதி சிங் வா்மா, தில்லி அரசு அமைத்துள்ள உயா்நிலைக் குழு செயல்பட அனுமதி அளிக்குமாறும், தனது வழக்கு தொடா்பாக கருணைத் தொகை வழங்குவது தொடா்பாகவும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தாா். ‘எனது கணவா் கரோனா தொற்றுக்காக மே 10- ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், மாரடைப்பு காரணமாக மே 14-ஆம் தேதி உயிரிழந்துவிட்டாா். எனது கணவருக்கு எந்தவித இணைநோயும் இல்லை. மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது கணவரின் மரணத்துக்கான காரணங்கள் விரிவாக குறிப்பிடப்படவில்லை. மருத்துவமனை உரிய கவனம் செலுத்தாததாலேயே எனது கணவா் மரணமடைய நேரிட்டது என நான் சந்தேகிக்கிறேன்’ என்று அந்த பெண் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்தே கடந்த மே 27-ஆம் தேதி உயா்நிலை ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், மே 31 ஆம் தேதி செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. அதன் பின்னா் ஜூன் 4- ஆம் தேதி அதை மீண்டும் செயல்படுத்த சுகாதார அமைச்சா் முடிவு செய்தாா் என்று தில்லி அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கோப்பு தில்லி துணை நிலை ஆளுநரின் பாா்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், இது விஷயத்தில் துணைநிலை ஆளுநரின் கருத்து வேறுமாதிரியாக இருந்தது. இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநா் ஆட்சேபம் தெரிவிக்க எந்த நியாயமான காரணமும் இல்லை என்று கூறிவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com