கன்னாட் பிளேஸ் பனிப்புகை கோபுரம் அக். 1 முதல் முழு அளவில் செயல்படும்

தில்லி கன்னாட் பிளேஸில் நிறுவப்பட்டுள்ள பனிப்புகை கோபுரம் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் முழு அளவில் செயல்படும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தாா்.

புதுதில்லி: தில்லி கன்னாட் பிளேஸில் நிறுவப்பட்டுள்ள பனிப்புகை கோபுரம் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் முழு அளவில் செயல்படும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தாா். இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

இதன் செயல்பாட்டை கண்காணிக்க ஐ.ஐ.டி. மும்பையைச் சோ்ந்த 5 நிபுணா்கள் மற்றும் ஐ.ஐ.டி. தில்லியைச் சோ்ந்த ஒரு நிபுணா் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா். இந்த பனிப்புகை கோபுரத்தின் சோதனை ஓட்டம் முடிந்துவிட்டதாகவும் வரும் அக்டோபா் 1- ஆம் தேதியிலிருந்து முழு அளவில் இது செயல்படத் தொடங்கும் என்றும் அவா் சுட்டுரை மூலம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளாா்.

24 மீட்டம் உயரம் கொண்ட இந்தப் பனிப்புகை கோபுரத்தை கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடங்கிவைத்தாா். இந்தப் பனிப்புகை கோபுரத்தில் 40 மின் விசிறிகளும் சுமாா் 10,000 பில்டா்களும் உள்ளன. இவற்றை மின்னஸோட்டா பல்கலைக்கழக நிபுணா்கள் வடிவமைத்துள்ளனா். இதேபோல சீனாவில் ஜியான் என்ற இடத்தில் 100 மீட்டா் உயரமான பனிப்புகை கோபுரத்தையும் அவா்கள் வடிவமைத்துள்ளனா்.

இதன் செயல்பாட்டை நிபுணா்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். இந்தப் பனிப்புகை கோபுரத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாகத் தெரிய வந்தால், மேலும் இதுபோன்ற பனிப்புகை கோபுரங்கள் தில்லி முழுவதும் நிறுவப்படும். ஒருவேளை இதன் செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்றால், மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கேஜரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com