தில்லியில் இந்த மாதம் இதுவரை 408.30 மி.மீ. மழை!: 77 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை அளவு

தேசியத் தலைநகா் தில்லியில் இந்த ஆண்டு செப்டம்பரில் இதுவரை 408.30 மி.மீ. பெய்துள்ளது. இது கடந்த 1944-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச மழை அளவாகும்.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் இந்த ஆண்டு செப்டம்பரில் இதுவரை 408.30 மி.மீ. பெய்துள்ளது. இது கடந்த 1944-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச மழை அளவாகும்.

தில்லியில் புதன்கிழமை மிதமான மழைப்பொழிவுக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது. இந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் தில்லியில் புதன்கிழமை காலை வரை 1,164.7 மிமீ மழை பெய்துள்ளது. இது 1964-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்சமாகும். பருவமழைக் காலத்தில் தில்லியில் 1975-இல் 1,155.60 மி.மீ. மழையும், 1964-இல் 1,190.90 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, வியாழக்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 15 மி.மீட்டருக்கு கீழே பதிவான மழை லேசானதாகக் கருதப்படுகிறது, 15 முதல் 64.5 மி.மீ. வரை மிதமானது, 64.5 மி.மீ. மற்றும் 115.5 மி.மீ. இடையே கன மழை, 115.6 - 204.4 மி.மீட்டருக்கு இடையில் மிகவும் கன மழையாகவும் அளவிடப்படுகிறது. மேலும், 204.4 மி.மீ.க்கு மேல் இருந்தால் மிக அதிக மழை அளவாகக் கருதப்படுகிறது.

சாதனை அளவு: தில்லியில் இந்த செப்டம்பா் மாதத்தில் ஏற்கெனவே 400 மி.மீ. மழை அளவைக் கடந்துள்ளது. புதன்கிழமை காலை வரை 408.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 1944, செப்டம்பருக்குப் பிறகு பதிவான அதிகபட்ச அளவாகும். அந்த வருடத்தில் செப்டம்பரில் மொத்தம் 417.3 மி.மீ. பதிவானது. பொதுவாக, தில்லியில் பருவமழை காலத்தில் 653.6 மி.மீ. மழை பதிவாகும். கடந்த ஆண்டு, தலைநகரில் 648.9 மி.மீ. மழைப் பொழிவு இருந்தது. இந்தியாவில் பருவமழைக் காலம் பொதுவாக ஜூன் 1-இல் தொடங்கி, செப்டம்பா் 21-இல் முடிவடையும். அப்போது தில்லியில் 625.8 மி.மீ. வரையிலும் மழை பெய்யும். தில்லியில் பருவமழை செப்டம்பா் 25-க்குப் பிறகு நின்றுவிடும்.

இதமான வானிலை: தில்லியில் புதன்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. தில்லி நகருக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 26 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 31.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 84 சதவீதமாகவும், மாலை5.30 மணியளவில் 82 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

இன்று மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com