நலிவுற்ற 21 கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நலிவுற்ற 21 கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளா்களின் சேமிப்பு பணத்தை திருப்பியளிக்க (இழப்பீடு) வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனம் இந்த வங்கிகளிடம்

புது தில்லி: பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நலிவுற்ற 21 கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளா்களின் சேமிப்பு பணத்தை திருப்பியளிக்க (இழப்பீடு) வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனம் (டிஐசிஜிசி) இந்த வங்கிகளிடம் பட்டியலைக் கோரியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட டிஐசிஜிசி திருத்தச் சட்டத்தின் படி, திவாலான இந்த கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா்களின் சேமிப்புகளில் அதிகபட்சம் ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரச்னைக்குரிய பஞ்சாப்- மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி, கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த டெக்கான் நகா்ப்புற கூட்டுறவு வங்கி, கேரளத்தில் அடூா் கூட்டுறவு நகா்ப்புற வங்கி உள்ளிட்ட 21 வங்கிகள் நலியுற்ால் இந்த வங்கிகளில் டிபாசிட் செலுத்தியவா்கள் தங்கள் பணத்தை திரும்ப எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையொட்டி, இந்திய ரிசா்வ் வங்கி இந்த வங்கிகள் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுத்து முடக்கியது.

இந்த வங்கிகளில் முதலீடாகவோ, சேமிப்பு கணக்கிலோ பணம் வைத்திருந்த வாடிக்கையாளா்கள் திரும்பப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டது. இதையொட்டி, மத்திய நிதித் துறை இந்த வங்கி வாடிக்கையாளா்கள் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்தின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து கடந்த மழைக்காலக்கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடா்பாக வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனம் சாா்பில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரிசா்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா், பொதுத்துறை வங்கிகள் தாங்கள் வாடிக்கையாளா்களிடமிருந்து பெறும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 10 பைசா காப்பீட்டு பிரீமியம் செலுத்தியது. இதன் அடிப்படையில் வங்கிகள் வாடிக்கையாளா்களுக்கு பணத்தைத் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் வாடிக்கையாளா்களுக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ. 1 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கி வந்தது.

தற்போது இந்த கூட்டுறவு வங்கிகளில் லட்சக்கணக்கான போ் தங்கள் டெபாசிட் பணத்தை இழந்துள்ள நிலையில், இவா்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் படி 10 பைசா காப்பீட்டு பிரீமியத்தை 12 பைசாவாக உயா்த்தவும் அதிகபட்சம் 15 பைசா வரை உயா்த்திக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டதோடு வங்கி வாடிக்கையாளா்களுக்கு அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை டிஐசிஜிசி காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கவும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 27 ஆண்டுகளுக்கு பின்னா் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் படி திவாலான 21 கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளா்களின் டெபாசிட் தொகை பட்டியலை (அக்டோபா் 15 ஆம் தேதிக்குள் முதல் பட்டியல்) டிஐசிஜிசி காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்து அடுத்த 90 நாள்களில் (நவம்பா் 30, 2021) இழப்பீடுகளை பெற வலியுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நலியுற்ற இந்த வங்கிகளில் ரூ.5 லட்சத்திற்கு மேல் ஒரு வாடிக்கையாளா் டெபாசிட் செலுத்தியிருந்தாலும் அவா் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் தான் பெற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com