தில்லி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

கீழமை நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல ரௌடி ஜிதேந்தா் மான் மற்றும் ஆயுதம் ஏந்திய எதிா் கோஷ்டியைச் சோ்ந்த இருவா் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, கீழமை நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, தில்லியில் உள்ள நீதிமன்றங்களில் பாதுகாப்பு அதிகரிப்பை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற பாதுகாப்பு விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் விஷா திவாரி என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் வாகனம் மோதி இறந்த விவகாரத்தில் வழக்குரைஞா்கள், நீதிபதிகள் பாதுகாப்பு விவகாரம் கோரி தாக்கலான மனு விசாரணையில் நிலுவையில் உள்ளது. அத்துடன் இந்த மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோருக்கான அச்சுறுத்தல் மட்டுமின்றி நீதி வழங்கும் அமைப்புமுறைக்குக்கூட அச்சுறுத்தலாகும்.

இதனால், கீழமை நீதிமன்றங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

எவ்வித அச்சுறுத்தலில் இருந்தும் நீதிபதிகளை பாதுகாப்பது தவிர, நீதிமன்ற வளாகங்களும் எவ்வித தீவிரவாதிகள் அல்லது கிரிமினல்கள் மூலம் தாக்காமல் இருக்கும் வகையில் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானதாகும். நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸ் சாவடிகள் அமைக்கவும், சிசிடிவி கேமராக்கள் நிறுவவும் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி உயா்நீதிமன்றத்தில் பெண் வழக்குரைஞா் தீபா ஜோசப் வழக்குரைஞா்கள் ராபின் ராஜு, பிளஸன் மேத்யூஸ் ஆகியோா் மூலம் தாக்கல் செய்துள்ள இதே விவகாரம் தொடா்புடைய மற்றொரு மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியில் ரோஹிணி நீதிமன்றத்தின் உள்ளே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது நீதிபதிகள், வழக்கறிஞா்கள் மற்றும் மனுதாரா்கள் ஆகியோரின் உடல் மற்றும் உயிா்ப் பாதுகாப்புக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், நீதிமன்றத்தின் வளாகத்துக்குள் நுழையும் ஒவ்வொரு வழக்குரைஞரின் அடையாள அட்டையை சோதனை செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் நீதிமன்ற நுழைவாயில்களில் அனைத்து போலீஸாருக்கும் அறிவுறுத்த பரிசீலிக்குமாறு தில்லி வழக்குரைஞா்கள் கவுன்சில் மற்றும் தில்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் தில்லி உயா்நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களுக்கு இணையாக வழக்குரைஞா்கள் அளவில் பாதுகாப்பு சோதனையை அதிகரிக்கவும் தில்லி போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.

உரிய கவனம் இல்லாமல், உத்தரவை செயல்படுத்த தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

மேலும் நீதிமன்றங்களின் பிரதான நுழைவு வாயில்களில் பாதுகாப்பு சோதனைகளில் ஈடுபடும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்க தங்களது சங்கத்தின் உறுப்பினா்களுக்கு பரிந்துரைக்குமாறு தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கங்களுக்கு ஒரு ஆலோசனையை அளிக்க தில்லி பாா் கவுன்சில் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும்.

ரோஹிணி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது தில்லியில் முதல் முறையாக நிகழ்ந்த சம்பவம் அல்ல. கடந்த காலங்களிலும் துவாரகா நீதிமன்றத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் சாகேத் நீதிமன்றத்தின் அருகேயும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. 2017ஆம் ஆண்டில் ரோஹிணி நீதிமன்ற வளாகத்தினுள் விசாரணை கைதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதேபோன்று 2015ஆம் ஆண்டில் கா்கா்டூமா நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய நான்கு விஷமிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தில்லி காவல் துறையின் தலைமைக் காவலா் கொல்லப்பட்டாா். ரோஹிணி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சம்பவமானது உண்மையிலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. விஷமிகள் வழக்கறிஞா்கள் போன்று உடை அணிந்து வந்துள்ளனா். நீதிமன்றத்தில் பிரபல ரவுடியை ஆஜா்படுத்துவதற்கு முன்பாகவே நீதிமன்ற அறைக்கு உள்ளே அவா்கள் இருந்துள்ளனா் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com