தில்லியில் காலையில் மேகமூட்டம்; பகலில் லேசான மழை!
By நமது நிருபா் | Published On : 26th September 2021 06:45 AM | Last Updated : 26th September 2021 06:45 AM | அ+அ அ- |

தேசிய தலைநகா் தில்லியில் சனிக்கிழமை பகலில் லேசான மழை பெய்ததது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.
சனிக்கிழமை வரையிலான தில்லியின் இந்த ஆண்டு பருவ மழைக் காலத்தில் 1,169 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 1964-க்குப் பிறகு பதிவான அதிகபட்ச அளவாகும்.
தில்லி நகருக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்த பட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு டிகிரி உயா்ந்து 24.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி குறைந்து 33.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 90 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 72 சதவீதமாகவும் இருந்தது.
இதேபோல அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 31.6 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 33 டிகிரி, பாலத்தில் 31.5 டிகிரி, ரிட்ஜில் 32.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.
வெள்ளிக்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 32.7 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.
தில்லியில் மாலை 6.20 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 70 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) நிகழ்நேர தரவுகள் தெரிவிக்கின்றன.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.