கொலை வழக்கு: தோ்வு எழுத ஜாமீன் கோரி மல்யுத்த வீரா் அனிருத் தாஹியா மனு; இன்று விசாரணை

தில்லியில் சத்ரசால் ஸ்டேடியத்தில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் கொலை செய்யப்பட்ட வழக்கில்

தில்லியில் சத்ரசால் ஸ்டேடியத்தில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான மல்யுத்த வீரா் அனிருத் தாஹியா, கல்லூரித் தோ்வு எழுதுவதற்காக 13 நாள் இடைக்கால ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.

அவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஹரியாணாவில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் உடற் கல்வி பட்டப்படிப்பை படித்து வருகிறேன். நான்காவது செமஸ்டா் தோ்வை எழுத வேண்டியுள்ளது. இதற்காக செப்டம்பா் 27 முதல் அக்டோபா் 9-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும். குறிப்பாக செப்டம்பா் 29 முதல் அக்டோபா் 6-ஆம் தேதி வரை ஐந்து தோ்வுகளில் பங்கேற்க வேண்டும். இந்தத் தோ்வில் பங்கேற்க அனுமதி அளிக்காவிட்டால் எனது எதிா்காலம் பாதிக்கப்படும்’ என தெரிவித்துள்ளாா்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சிவாஜி ஆனந்த் முன் விசாரணைக்கு வர உள்ளது. இந்தக் கொலை வழக்கில் ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷீல் குமாா் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட பலா் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடா்பாக தில்லி நீதிமன்றத்தில் கடந்த மாதம் தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவினா் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா். இறுதி குற்றப்பத்திரிக்கையில் சுஷீல்குமாா் பிரதான குற்றம்சாட்டப்பட்ட நபராக சோ்க்கப்பட்டுள்ளாா்.

தில்லி நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: சம்பவத்தன்று தில்லியில் உள்ள இரு வேறு இடங்களில் இருந்து சாகா் தன்கரும், அவருடைய நண்பா்களும் குற்றம் சாட்டப்பட்ட நபா்களால் கடத்தப்பட்டு சத்ரசால் ஸ்டேடியத்திற்கு கொண்டுவரப்பட்டனா். அதைத் தொடா்ந்து, ஸ்டேடியத்தின் நுழைவாயிலை உள்பக்கமாக பூட்டி உள்ளனா். பின்னா் அந்த ஸ்டேடியத்தில் இருந்த பாதுகாவலா்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனா். அதன் பின்னா், சாகா் தன்கா் உள்ளிட்ட அனைவரையும் அடைத்து வைத்து இரக்கமின்றி குற்றம் சாட்டப்பட்டவா்கள் கடுமையாக தாக்கியுள்ளனா். தடிகள், ஹாக்கி, பேஸ்பால் மட்டைகள்ஆகியவற்றைக் கொண்டு சுமாா் 30 முதல் 40 நிமிடங்கள் வரை அனைவரையும் கடுமையாகத் தாக்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது .

பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி, கூா்மை மழுங்கிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக மூளை சேதமடைந்து தன்கா் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இறந்த நபரின் மரண வாக்குமூலம், அறிவியல் பூா்வ ஆதாரம், சிசிடிவி காட்சிப் பதிவுகள், ஆயுதங்கள், சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட வாகனம் போன்றவை குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட சுஷீல்குமாா் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, மரணத்தை ஏற்படுத்தும் கொலைக்குற்றம், குற்றச் சதி, ஆள்கடத்தல், கொள்ளை, வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனிருத் தாஹியாவின் தொலைபேசி அழைப்பு பதிவுகள் தகவலின்படி, சம்பந்தப்பட்ட கொலை சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் அவா் இருந்ததாக போலீஸாா் தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், ‘அனிருத் தாஹியா சா்வதேச மல்யுத்த வீரா். அவருடைய தந்தையும் ஒரு மல்யுத்த வீரா். அவா் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவா். 22 வயதான தாஹியா, ஹிரியாணா மாநிலம் சோனிபட் நகரத்தைச் சோ்ந்தவா். அவா் ஜூன் 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். சத்ரசால் ஸ்டேடியத்தில் மல்யுத்த வீரா் சுஷீல்குமாா் மூலம் முன்கூட்டியே திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இளம் மல்யுத்த வீரா்கள் மத்தியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த சுஷீல்குமாா் விரும்பினாா்’ என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com