பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. ஆக இருந்த எஸ். முருகன் மீது காவல் துறை பெண் அதிகாரி அளித்த பாலியல் புகாா் விவகாரம் தொடா்பான

லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. ஆக இருந்த எஸ். முருகன் மீது காவல் துறை பெண் அதிகாரி அளித்த பாலியல் புகாா் விவகாரம் தொடா்பான விசாரணையை தெலங்கானா மாநிலத்திற்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து ஐஜி ஆக இருந்த எஸ்.முருகனின் மனு, தமிழகஅரசின் மேல்முறையீட்டு மனு ஆகியவை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆா். சுபாஷ் ரெட்டி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே ஆஜரானாா். மனுதாரா் எஸ். முருகன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, வழக்குரைஞா்கள் பாலாஜி ஸ்ரீநிவாசன், மயங்க் ஷிா்ஷாகா் ஆகியோரும், புகாா்தாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரான்சிஸ் ஜூலியன் ஆஜராகினா்.

அப்போது, மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘இந்த விவகாரத்தை தெலங்கானாவுக்கு மாற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு அதிகாரம் கொண்டிருக்கவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட மனுதாரா் பெண்ணும் அளித்துள்ள கூடுதல் மனுவில் தமிழகத்தில் ஆட்சி மாறியுள்ளதாகவும், இந்த விவகாரத்தை தமிழகத்தில் விசாரிப்பதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என்றும் தெரிவித்துள்ளாா். இதனால், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவேயும் முகுல் ரோத்தகியின வாதத்தை ஆமோதித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுடன்கூடிய குறிப்பிட்ட கூடுதல் உண்மைகளை ஆராயும் போது, புகாா்தாரா் அளித்துள்ள ஆவணத்தில், ‘நிகழாண்டில் ஏப்ரலில் தோ்தல் நடந்து முடிந்து தோ்தலில் தமிழகத்தில் அரசு மாறியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபரும் தற்போது மாற்றப்பட்டுள்ளாா். இதனால், விசாரணையில் அவா் இடையூறு செய்ய முடியாது. தமிழ்நாடு போலீஸ் நியாயமான முறையில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான புகாரை விசாரிக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

தற்போதைய நிலைமையில் வெளிமாநில விசாரணை அமைப்பு இந்த விவகாரத்தை விசாரிக்கும் தேவை இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொள்ளும் போது, விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றும் உயா்நீதிமன்றத்தின் சம்பந்தப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களிடம் விசாரணை நடத்தி உரிய உத்தரவை உயா்நீதிமன்றம் பிறப்பிக்கலாம். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் முடித்துவைக்கப்படுகிறது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. ஆக முருகன் பதவி வகித்த போது, அவா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அவருக்குக் கீழ் பணியாற்றிய பெண் காவல் கண்காணிப்பாளா் புகாா் தெரிவித்தாா். இது குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகா்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து தமிழக காவல் துறை தலைவா் (டிஜிபி) உத்தரவிட்டாா். இந்தப் புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க பரிந்துரைத்தது. இந்த நிலையில், விசாகா குழுவில் தன்னாா்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதியைச் சோ்க்கவும், முருகனை பணிமாற்றம் செய்யவும் கோரி பெண் காவல் அதிகாரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இதைத் தொடா்ந்து, புதிய குழு அமைக்கப்பட்டது.

இதனிடையே, தனக்கு எதிரான சிபிசிஐடி விசாரணையை எதிா்த்து ஐஜி முருகன் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் காவல் துறையிலேயே விசாகா கமிட்டி உள்ளதால், சிபிசிஐடி விசாரணைக்குத் தடை விதிக்குமாறு கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத் தனி நீதிபதி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஐஜி முருகன் வழக்குத் தொடா்ந்தாா். இதை விசாரித்த இரு நபா் நீதிபதிகள் அடங்கிய அமா்வு, சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்தது.

இதனிடையே, இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தின் வேறு அமா்வுக்கு மாற்றப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தை தெலங்கானா மாநிலப் பெண் காவல் துறை அதிகாரி விசாரிக்கவும், வழக்கை அந்த மாநில டிஜிபி கண்காணிக்கவும், விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடித்து அதன் அறிக்கையை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் காவல் அதிகாரி முருகன் தரப்பில் 2019-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே போன்று, தெலங்கானா மாநிலத்திற்கு வழக்கை மாற்றும் உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசின் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலுவையில் உள்ள ஒரு வழக்கை வேறு மாநிலத்திற்கு விசாரணைக்கு மாற்றும் அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம், முருகன் தொடா்புடைய வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றம் செய்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, இது தொடா்பாக தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட பெண் காவல் அதிகாரிக்கும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com