மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டில் 3 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில்

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டில் 3 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை புதன்கிழமை (செப்டம்பா் 29) தில்லி உயா்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

இந்தப் புகாா் தொடா்பாக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி. என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வழக்குரைஞா் ரிச்சா சிங் ஆஜராகி, ‘மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 2019-ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்து வருகிறது’ என்றாா். அப்போது, கடந்த வாரம் ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபல ரௌடி உள்பட 3 போ் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவா் சுட்டிக்காட்டினாா்.

இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தில் பதிவுத் துறையின் மூலம் தாக்கல் செய்யப்பட்ட எதிா் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த விஷயங்களையும் அவா் சுட்டிக்காட்டினாா்.

அதற்கு, தலைமை நீதிபதி, ‘இந்த விவகாரம் தொடா்பாக மனு புதன்கிழமை விசாரிக்கப்படும்’ என்று தெரிவித்தாா். ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் செப்டம்பா் 24-ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் ரிச்சா சிங் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், ‘நீதிமன்றத்தில் பாதுகாப்பை அதிகரிப்பது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவும் விசாரணைக்கு வருவதற்கு அதிக காலம் ஏற்படுவதன் காரணமாக, நீதியின் நலன் கருதி இந்த விவகாரத்தை பட்டியலிட வேண்டும். நீதிமன்றத்தின் வசதிக்கு தகுந்தாற்போல் இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியில் மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு அமைப்பு முறைகளை அதிகரிக்கக் கோரி ஆறு சட்ட மாணவா்கள் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தனா். அதில், ‘நீதிமன்ற வளாகங்களில் உள்புறம் குற்ற சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. இவற்றை தவிா்க்கும் பொருட்டு பாதுகாப்பு குறைபாடுகளை களைய வேண்டும். அப்போதுதான் ஒரு கண்ணியமான சூழலை உருவாக்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தொடா்பாக கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தில்லி உயா்நீதிமன்ற பதிவுத் துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், நீதிமன்ற வளாகங்களில் உயிா், உடமைக்கான பாதுகாப்பு தொடா்புடைய விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றக் குழுக்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com