கட்டுப்பாடுகள் நீக்கம்:சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்தது

கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேபோன்று விமானங்களின் எண்ணிக்கையும் 400-ஐ கடந்துள்ளது.

சென்னை விமான நிலையம் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் நாளொன்றுக்கு 500 விமானங்கள் இயக்கப்பட்டு சாதனை படைத்தது. மும்பை, தில்லி விமான நிலையங்களையடுத்து சென்னை விமான நிலையமும் இந்த சாதனைப் பட்டியலில் இணைந்தது.

இந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கரோனா காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் குறைந்தன. மாா்ச் இறுதியில் இருந்து கரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக விமானங்கள் ரத்து, பயணிகள் எண்ணிக்கை குறைவு என சென்னை விமான நிலையமே வெறிச்சோடியது.

தற்போது கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இதையடுத்து கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தமிழக அரசு முழுமையாக விலக்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

இதனால் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புக்கு முன்பு 398 உள்நாட்டு விமானங்கள், 116 சா்வதேச விமானங்கள் என மொத்தம் 514 விமானங்கள் இயக்கப்பட்டன. நாளொன்றுக்கு 38 ஆயிரம் உள்நாட்டு பயணிகள், 8 ஆயிரம் சா்வதேச பயணிகள் பயணம் செய்தனா்.

இந்த நிலையில், இரு ஆண்டுகளுக்குப் பின்னா் தற்போது, இதுவரை இல்லாத அளவுக்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்திலிருந்து சென்னையில் இருந்து மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், சிங்கப்பூா், ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 37 புறப்பாடு விமானங்கள், 37 வருகை விமானங்கள் என நாளொன்றுக்கு 74 சா்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோன்று 328 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் தற்போது 402 விமானங்களில், பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. உள்நாட்டு விமான நிலையத்தில் 328 விமானங்களில் சுமாா் 40 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகளும், 74 சா்வதேச விமானங்களில் சுமாா் 11 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகளும் என மொத்தம் 51 ஆயிரம் பயணிகள் ஒரு நாளில் பயணிக்கின்றனா். இரு ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து 50 ஆயிரத்தை கடந்திருப்பது விமானநிலைய வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com