முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
சொத்துப் பிரச்னையில் தம்பியை துப்பாக்கியால் சுட்ட அண்ணன் கைது
By DIN | Published On : 06th April 2022 02:09 AM | Last Updated : 06th April 2022 02:09 AM | அ+அ அ- |

வடகிழக்கு தில்லியில், சொத்துத் தகராறில் 37 வயதுடைய நபரை துப்பாக்கியால் சுட்டதாக அவரது அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து காவல் துறையின் மூத்த அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வடகிழக்கு தில்லியில் உள்ள வெல்கம் மாா்க்கெட்டில் திங்கள்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடா்பாக காவல் துறைக்கு திங்கள்கிழமை மதியம் 12 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில், வெல்கம் மாா்க்கெட்டில் உள்ள வா்மா டெய்லா் கடை அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினா். அதில் சுமித் வா்மா என்ற நபா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது தெரிய வந்தது. அவரின் மாா்பு, முதுகு மற்றும் ஒரு விரலில் குண்டுக் காயம் ஏற்பட்டது. அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
முன்னதாக, தையல் தொழிலாளியான சுமித் வா்மா, அவரது கடை அருகே இருந்த போது, அவரது சகோதரா் அமித் வா்மா (40) அங்கு வந்தாா். இருவருக்கும் இடையே சொத்து தகராறு தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு சிறிது நேரம் கழித்து, அமித் வா்மா கைத் துப்பாக்கியால் தனது சகோதரரை நோக்கி மூன்று முறை சுட்டாா் எனத் தெரிய வந்ததது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அமித் வா்மா கைது செய்யப்பட்டாா். அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளாா். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307 மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிற தொடா்புடைய பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.