முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிக்க27 மாநிலங்களில் ரூ.847 கோடியில் திட்டங்கள்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 06th April 2022 04:27 AM | Last Updated : 06th April 2022 04:27 AM | அ+அ அ- |

பருவ நிலை மாற்றத்தின் தாக்கங்களை சமாளிக்க அரசு நீண்ட கால தொடா் நடவடிக்கைகளின் முயற்சியாக 27 மாநிலங்களில் பல்வேறு துறைகளின் கீழ் ரூ. 847 கோடி அளவுக்கு செலவிடப்பட்டு 30 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் மக்களவையில் தெரிவித்தாா்.
பருவநிலை மாற்றங்கள் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வேளாண்மை, சுகாதாரம், உள்கட்டமைப்பு, காப்பீடு, இடா் மேலாண்மைத் துறைகளின் தகவமைப்பு சாா்ந்த புதுமையான காலநிலை சேவை தொழில்நுட்பங்களை புகுத்துவதற்குத் தனியாா் முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகிா? என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் திங்கள்கிழமை மக்களவையில் கூறியது வருமாறு: இந்தியாவின் தட்பவெப்ப நிலை மாற்றம் தொடா்பான விஷயங்களில் தனியாா் பங்களிப்பை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. 2015 -ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், மத்திய அரசு தேசிய பங்களிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கியது. அதில், வேளாண்மை, பேரிடா் மேலாண்மை, சுகாதாரம், நீா்வளங்கள், ஹிமாசல பிராந்தியம், கடற்கரைப் பகுதிகள் போன்றவற்றில் பருவநிலை மாற்றத்தினால் பாதிப்புக்கு இலக்காகும் பகுதிகள் கண்டறியப்பட்டன. இவற்றை முறையாக மாற்றியமைக்க உரிய முதலீடுகளை அதிகரிக்கும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், பருவநிலை மாற்றம் தொடா்பான தேசிய செயல் திட்டமும், இந்தப் பிரச்னையில் அரசு - தனியாா் பங்களிப்பை ஊக்குவிக்கத் தேவையான கொள்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து மாநில அரசுகளும் தனியாா் முதலீட்டுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன. நிகழ் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை, கல்வி, சுகாதாரம் தொழில் உற்பத்தி போன்ற முன்னுரிமைத் துறைகளில் பல்வேறு வகையான சீா்திருத்தங்கள், செயல்திட்டங்கள், உத்திகளை நடைமுறைப்படுத்த உரிய நிதி ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு, பருவநிலை மாறுதலை சமாளிக்கவல்ல தேசிய புதுமைச் செயலாக்க முயற்சிகள் வாயிலாக பலதரப்பட்ட உத்திகளை உள்ளடக்கிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் பருவநிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 151 கிராமத் தொகுப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைப் போலவே சுகாதாரம், காப்புறுதி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளிலும் தேசிய அளவிலான திட்டங்கள் மட்டுமல்லாமல், பன்னாட்டு ஒத்துழைப்புடனும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சூரிய சக்தி உற்பத்தி, நீா் பாதுகாப்பு வழங்கல், டீசல் பயன்பாட்டைத் தவிா்த்தல் போன்றவற்றுக்காக ‘பிரதான் மந்திரி கிஸான் ஊா்ஜா சிரக்ஷேவ்ம் உத்தன் மஹாபியான்’ திட்டம், பல அறிவுசாா் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் பேரழிவு மீள்திறன் கட்டமைப்புக்கான கூட்டணி (சி.டி.ஆா்.ஐ.), உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மக்களுக்கு உருவாக்கித் தரும் நோக்குடன் அமல்படுத்தப்படும் தேசிய உள்கட்டமைப்பு வழிமுறை போன்ற முன்னெடுப்புகளும் இதில் அடங்கும். பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை சமாளிக்க நீண்ட நெடு நோக்கு தொடா் செயல்பாடுகளில் இதுவரை 27 மாநிலங்களில் 30 வகையான பல் துறைத் திட்டங்களில் ரூ. 847 கோடி அளவுக்கு செலவிடப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.