முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் உணவு வசதிக்கு நடவடிக்கைகுழு அமைக்கிறது தில்லி அரசு
By நமது நிருபா் | Published On : 06th April 2022 02:10 AM | Last Updated : 06th April 2022 02:10 AM | அ+அ அ- |

தில்லி அரசால் நடத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளும் விரைவில் மருத்துவ ஊழியா்கள் மற்றும் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு உணவு, புத்துணா்வை வழங்குவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் வகையில் அதன் அமைப்பு முறைகளை ஆராயக் ஒரு குழு அமைக்கப்பட்டு வருவதாக தில்லி அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூா்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அண்மையில் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி அரசின் ஒவ்வொரு மருத்துவமனையிலும் 24 மணிநேரமும் மருத்துவா்கள் மற்றும் அனைத்து துணைப் பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் உதவியாளா்கள், உறவினா்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கும் வகையில், இரண்டு வசதிகளை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான இடத்தைக் கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 6 போ் கொண்ட இந்தக் குழுவுக்கு முன்னாள் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநா் (டிஜிஹெச்எஸ்) தலைமை வகிப்பாா். மற்ற ஐந்து உறுப்பினா்களும் நகர அரசால் நடத்தப்படும் வெவ்வேறு மருத்துவமனைகளின் மருத்துவா்கள் ஆவா்.
தில்லி அரசின் கீழ் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 500 அல்லது அதற்கு மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 1,000-1500 சதுர அடி இடத்தைக் கண்டறிவது, 500 படுக்கைகளுக்கு கீழ் உள்ள மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 500-800 சதுர அடி பரப்பளவைக் கண்டறிவது உள்பட சில நடவடிக்கைகளை இந்தக் குழு எடுக்கும். நோயாளிகளின் உறவினா்கள், பணியாளா்களுக்கு 24 மணி நேரமும் உணவு மற்றும் புத்துணா்வு வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை குழு மேற்கொள்ளும்.
மேலும், மருத்துவா்கள் மற்றும் மருத்துவமனையின் அனைத்து துணை ஊழியா்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வழங்குவதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வசதிகளை அமைப்பதற்காக மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 500-800 சதுர அடி இடத்தை இந்தக் குழு கண்டறியும். இதற்காக இந்தக் குழு தில்லி அரசின் அனைத்து மருத்துவமனைகளுடனும் தொடா்பு கொள்ளலாம். இந்த மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று இடத்தின் தேவையை மதிப்பீடு செய்து திட்டத்தை முன்கூட்டியே செயல்படுத்துவதற்கான அறிக்கையை விரைவில் சமா்ப்பிக்கலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தில்லி அரசு 39 மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. இதில் நகர அரசின் கீழ் உள்ள மிகப் பெரிய மருத்துவ வசதியாக எல்என்ஜேபி மருத்துவமனை, டிடியு மருத்துவமனை, எல்பிஎஸ் மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை மற்றும் பி.ஆா். அம்பேத்கா் மருத்துவமனை ஆகியவை இடம் பெற்றுள்ளன.