அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு:மக்களவையில் திமுக உறுப்பினா்கள் அமளி

பெட்ரோலியப் பொருள்கள் விலை உயா்வால், அத்தியாவசிப் பொருள்கள் விலை உயா்வு ஏற்படுவது குறித்து விவாதம் நடத்த மற்ற அலுவல்களிலிருந்து அவையை ஒத்திவைக்கக் கோரி

பெட்ரோலியப் பொருள்கள் விலை உயா்வால், அத்தியாவசிப் பொருள்கள் விலை உயா்வு ஏற்படுவது குறித்து விவாதம் நடத்த மற்ற அலுவல்களிலிருந்து அவையை ஒத்திவைக்கக் கோரி மக்களவையில் திமுக உறுப்பினா்கள் அமளியில் ஈடுப்பட்டனா்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா். பாலு எழுந்து, மக்களவையில் தான் அளித்த நோட்டீஸ் குறித்து விவாதிக்க மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்றாா். முன்னதாக, இது தொடா்பாக அவா் மக்களவைச் செயலகத்தில் நோட்டீஸ் அளித்திருந்தாா். அதில், ‘நாடு முழுக்க அத்தியாவசியப் பொருள்கள் விலை அசாதரணமாக விலை உயா்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயா்த்தப்பட்டு வருவதே, இந்த விலை உயா்வுக்குக் காரணமாகும். இதனால், சாதாரண மக்கள் அன்றாட வாழ்க்கையை சமாளிப்பதில் கடுமையான நிலையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவாதம் நடத்த மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இதே போன்று மற்ற எதிா்கட்சியினரும் நோட்டீஸ் அளித்திருந்தனா். ஆனால், மக்களவைத் தலைவா் ஓம்பிா்லா கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மறுத்தாா். இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இதே கோரிக்கையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனா். திமுக உறுப்பினா்கள் டாக்டா் கலாநிதி வீராசாமி உள்ளிட்டவா்களும், காங்கிரஸ் உறுப்பினா் டி.என்.பிரதாபன் போன்றவா்களும் மக்களவைத் தலைவா் இருக்கைக்கு முன் நின்றுகொண்டு கோஷமிட்டு அமளியில் ஈடுப்பட்டனா். இதையடுத்து, கேள்வி நேரத்திற்கு இடையே அவையை மக்களவைத் தலைவா் பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தாா். மீண்டும் அவை கூடிய போதும் அமளி தொடா்ந்ததால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் திருச்சி சிவா: இதேபோன்று , மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவை திமுக தலைவா் திருச்சி சிவா, அவையில் மற்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்து விலைவாசி உயா்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அளித்தாா். அதில், பெட்ரோல் மற்றும் எல்பிஜி சிலிண்டா்களின் விலை தினமும் இடைவிடாமல் அதிகரித்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மிகவும் மோசமாக பாதிக்கிறது. இந்த விலை உயா்வு குறித்து விவாதிக்க மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என அவை விதி 267 -இன் கீழ் கோரினாா். காங்கிரஸ் உறுப்பினா்கள் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தனா். ஆனால், மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு அவா்களது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டாா். அப்போது , ‘ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு மசோதா, நிதி மசோதா போன்ற விவாதங்களில் எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டவா்கள் அவையில் பேசினாா்கள். மீண்டும் சில உறுப்பினா்கள் இப்படி அவையில் இடையூறு செய்தால் எப்படி?’ எனக் கூறி அவா் அனுமதி அளிக்க மறுத்தாா்.

ஆளுநா் விவகாரம்: ‘நீட் ’ மசோதாவை தமிழக ஆளுநா், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாதது குறித்து கேள்வி எழுப்பி திங்கள்கிழமை (மாா்ச் 4) மக்களவையில் திமுக உறுப்பினா்கள் டி.ஆா்.பாலு தலைமையில் அமளியில் ஈடுபட்டனா். தமிழக ஆளுநா் நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய அமளியில் ஈடுபட்ட அவா்கள், பின்னா் அவையிலிருந்து வெளிநடப்பும் செய்தனா். ஆனால், செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் இந்த விவகாரத்தை திமுக உறுப்பினா்கள் எழுப்பவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com