வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு: ஜாமியா மாணவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

கடந்த 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறையின் போது, குற்றச் சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) இளைஞா் பிரிவுத் தலைவரும்

கடந்த 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறையின் போது, குற்றச் சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) இளைஞா் பிரிவுத் தலைவரும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவருமான மீரான் ஹைதரின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரத்தில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தொடா்ந்த வழக்கில் மீரான் ஹைதரின் ஜாமீன் கோரும் மனு மீது கூடுதல் அமா்வு நீதிபதி அமிதாப் ராவத் இந்த உத்தரவை பிறப்பித்தாா்.

இந்த வன்முறை வழக்கில் ஹைதரைத் தவிர, முன்னாள் ஜேஎன்யு மாணவா் தலைவா் உமா் காலித், சா்ஜீல் இமாம், வெறுப்புக்கு எதிரான ஐக்கிய அமைப்பின் ஆா்வலா் காலித் சைஃபி, முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் இஷ்ரத் ஜஹான், பிஞ்ச்ரா தோட் அமைப்பின் ஆா்வலா்கள் குல்பிஷா பாத்திமா, சஃபூரா ஜா்கா், நடாஷா நா்வால், தேவாங்கனா கலிதா மற்றும் முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் உசேன் உள்ளிட்ட பல்வேறு இதர குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் மீதும் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணியில் ஏராளமான மாணவா்கள், முன்னாள் மாணவா்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்ாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவா்கள் பேரணிக்கு அழைப்பு விடுத்து, ஒரு கும்பலை வழிநடத்தி, வகுப்புவாத உணா்வுகளைத் தூண்டும் வகையில் பொது சதியில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜாமியா வளாகத்திற்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீது தாக்குதல் நடத்தியும், காவல் துறை மற்றும் பொது / தனியாா் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியும், கல் வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இந்த வன்முறை விவகாரத்தில் மீரான் ஹைதரை 2020, ஏப்ரல் 1-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com