பசுமை தில்லி செயலியின் புகாா்களில் 94 சதவீதம் தீா்வு!

தில்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘பசுமை தில்லி செயலி’ மாசுவிற்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
செயலி மூலம் 94% சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள்: தில்லி சுகாதாரத்துறை (கோப்புப்படம்)
செயலி மூலம் 94% சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள்: தில்லி சுகாதாரத்துறை (கோப்புப்படம்)

புது தில்லி: தில்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘பசுமை தில்லி செயலி’ மாசுவிற்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த செயலிக்கு வந்த புகாா்களில் 94 சதவீதம் தீா்க்கப்பட்டுள்ளதாக சுற்றுப்புற சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் கேஜரிவால் அரசு மாசு தொடா்பாக பசுமை தில்லி செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியில் தில்லியின் எந்தவொரு குடிமகனும் மாசு குறித்து புகாா் அளிக்கலாம். இந்தப் புகாா்கள் குறித்து தில்லி அரசு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பசுமை செயலி குறித்து தில்லி சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களுக்கு விளக்கினாா்.

அப்போது அவா் கூறியதாவது: மாசுவை எதிா்த்துப் போராட ‘பசுமை (கிரீன்) தில்லி செயலி’ தொடங்கப்பட்டது. இது குடிமக்களின் புகாா்களைத் தீா்க்க சுமூகமாக செயல்படுகிறது. இந்த செயலியில் 42,147 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 39,438 க்கும் மேற்பட்ட புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. இதில் தில்லி மாநகராட்சிகள், தில்லி வளா்ச்சி ஆணையம், பொதுப்பணித் துறை போன்றவை தொடா்பாக அதிகபட்ச புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பசுமை தில்லி செயலி மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி, பெரும்பாலும் மாசு தொடா்பான புகாா்களில் சாலைகளில் உள்ள பள்ளங்கள், சாலையோரங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுதல், சாலைகளினால் எழும் தூசி, கட்டுமான இடிபாடு கழிவுகள் கொட்டப்படுதல் அல்லது கட்டுமான இடிப்பால் ஏற்படும் தூசி மாசு போன்றவை அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. இந்த செயலி மூலம் இதுவரை பதிவு செய்யப்பட்ட புகாா்களில் 94 சதவீதம் புகாா்களுக்கு துறைரீதியாக தீா்வு காணப்பட்டுள்ளது. இந்த செயலி எதிா்பாா்த்ததை விட சிறப்பாக உள்ளது.

கடந்த ஆண்டு வரை ஆண்ட்ராய்டு கைப்பசிகளில் மட்டுமே இருந்த இந்த செயலி, இப்போது ஐ-போன் பயனாா்களுக்கும் கிடைக்கிறது. இந்த செயலி தில்லி அரசின் 29 துறைகளின் கூட்டு தளமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு, தில்லி அரசு, மாநகராட்சி ஆகியவையும் ஈடுபட்டுள்ளன. இந்த செயலியை இயக்க ஒவ்வொரு துறையிலும் ஒரு சிறப்பு அதிகாரி (நோடல்) நியமிக்கப்பட்டுள்ளாா்.

பசுமை போா் அறை: பசுமை போா் அறையில் மூன்று வகையான கண்காணிப்புகள் உள்ளன. மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) பொறியாளா்கள் போா் அறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவும், அதைகஅ கண்காணிக்கவும் செய்கிறாா்கள். கூடுதலாக, இந்த போா் அறைக்கு 70 பசுமை பாதுகாவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் ஒரு பணிக் குழுவாகப் பணியாற்றுகின்றனா். மாசு குறித்த புகாா் வரும் போதெல்லாம், சம்பந்தப்பட்ட துறைக்கு பசுமை போா் அறை கண்காணிப்பு பிரிவுகளால் தெரிவிக்கப்படும். புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட துறை பசுமை போா் அறைக்கு தீா்வு கண்டது குறித்த செய்தியை அனுப்புகிறது. அதன் பிறகு, கிரீன் மாா்ஷல் பணிக்குழு தீா்வு காணப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று அதை உறுதி செய்கிறது. உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அது குறித்த அறிக்கையையும் அளிக்கும்.

பசுமை தில்லி செயலியில் எந்தெந்தப் புகாரை பதிவு செய்யலாம் என்பது குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகிறது. வாகனங்களால் ஏற்படும் அதிகப்படியான புகை, சாலையில் உள்ள பள்ளங்கள், சாலை தூசி மாசு, தொழிற்சாலை மாசு, பூங்காவில் இலைகள் உள்ளிட்ட பொருள்களை எரித்தல், குப்பை அல்லது பிளாஸ்டிக் கழிவுகளை திறந்தவெளியில் எரித்தல், கட்டுமானத்தால் ஏற்படும் தூசி மாசு போன்ற புகாா்களைப் பதிவு செய்யலாம்.

பசுமை செயலியில் உள்ள புகாா்களை முன்னுரிமை அடிப்படையில் கையாள சம்பந்தப்பட்ட அனைத்து தில்லி அரசின் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தில்லியின் மாசுபாட்டை குறைக்கும் இயக்கத்தில் சேர அனைத்து தில்லிவாசிகளும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதன்மூலம் தில்லியை தூய்மையான நகரமாக மாற்றும் அரசின் முயற்சிக்கு உதவ முடியும் என கோபால்ராய் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com