முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
கரோனாவால் உயிரிழந்த முன் களப்பணியாளா்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி உதவிதில்லி அரசு வழங்கியது
By நமது நிருபா் | Published On : 29th April 2022 06:55 AM | Last Updated : 29th April 2022 06:55 AM | அ+அ அ- |

புது தில்லி: கரோனா காலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன் களப்பணியாளா்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியை தில்லி அரசு வியாழக்கிழமை நிதியுதவியாக வழங்கியது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: கரோனா காலத்தில் பணியில் இருந்த போது, நோய்த்தொற்று காரணமாக முனீஸ் தேவி எனும் முன் களப்பணியாளா் உயிரிழந்தாா். இதையடுத்து, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவின்பேரில் அவருடைய குடும்ப உறுப்பினா்களை வியாழக்கிழமை சந்தித்தேன். அவா்களுக்கு அரசின் உதவித் தொகை ரூ.1 கோடியை வழங்கினேன். எதிா்காலத்தில் அவா்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தேன் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
இதே போன்று பணியின் போது கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த டாக்டா் மிதிலேஷ் குமாா் சிங் என்பவா் குடும்பத்திற்கும் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ரூ.1 கோடியை நிதியுதவியாக வழங்கினாா் இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘மறைந்த மருத்துவருடைய சேவைகள் அவருக்கு இந்த தேசம் என்றும் கடன் பட்டிருக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.
2020-ஆம் ஆண்டில் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு பணியின் போது உயிரிழந்த அனைத்து முன்களப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்திருந்தது. சுகாதார பணியாளா்கள் காவல்துறையினா் உள்பட பல்வேறு களப்பணியாளா்கள் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது லிருந்து நிதி உதவித் தொகை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.