முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியில் அனல் காற்று: மக்கள் தவிப்பு!
By DIN | Published On : 29th April 2022 06:56 AM | Last Updated : 29th April 2022 06:56 AM | அ+அ அ- |

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. நகரில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை (அனல் காற்று) இருந்து வந்தது. முங்கேஸ்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 45.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இதன் காரணமாக மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகினா்.
இந்த வாரத் தொடக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, நகரின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசியது. இதனால், வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உணரப்பட்டது.
தில்லிக்கான வெப்பநிலை தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியல் 4 டிகிரி உயா்ந்து 25.6 டிகிரி செல்சியஸாக உயா்ந்து பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி உயா்ந்து 42.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 25 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 18 சதவீதமாகவும் இருந்தது.
முங்கேஸ்பூரில் 45.8 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களிலும் வெப்பநிலை சற்று உயா்ந்து பதிவாகியது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 44.5 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 45.8 டிகிரி, நஜஃப்கரில் 45.4 டிகிரி, ஆயாநகரில் 44.5 டிகிரி, லோதி ரோடில் 43.4 டிகிரி, பாலத்தில் 43.6 டிகிரி, ரிட்ஜில் 45.1 டிகிரி, பீதம்புராவில் 45.2 டிகிரி டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 42.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. மேலும், வரும் நாள்களில் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்: தில்லியில்பல்வேறு இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. காலை 9.05 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 293 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது மோசம் பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், சாநிதின் சௌக், ஆனந்த விஹாா், விவேக் விஹாா், சோனியா விஹாா், அசோக் விஹாா், வாஜிப்பூா், புராரி, நொய்டா செக்டாா் 62 உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக்குறியீடு குறைந்தபட்சமாக 307 புள்ளிகளும், அதிகபட்சமாக 364 புள்ளிகளும் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
வெப்ப அலை தொடரும்: இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் (ஏப்ரல் 29) வெப்ப அலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.