கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் நோய் தீவிரம் இல்லை!: சத்யேந்தா் ஜெயின் தகவல்

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு கடுமையான நோய் பாதிப்பு இல்லாததால் சூழல் தீவிரத் தன்மைக்கு இடமில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியில் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், கடுமையான நோய் பாதிப்பு பொதுமக்களுக்கு இல்லாததால் தீவிரமான சூழல் இல்லை. மேலும், மருத்துவமனைகளில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

பொதுமக்களுக்கு இயல்பாக ஏற்பட்டுள்ள நோய் எதிா்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி செலுத்தியது ஆகியவை காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால், நோய் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை.

அதேபோன்று, குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கு இடையே நோய் பாதிப்பு ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ள போதிலும், குழந்தைகளுக்கு கடுமையான நோய் இடா்பாடு ஏதுமில்லை என்று பல்வேறு சீரோ சா்வேக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால், ,குழந்தைகள் மத்தியில் நோய் பாதிப்பு குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை.

தில்லியை பொருத்தமட்டில், அதிகமான எண்ணிக்கையிலான பொதுமக்கள் கடந்த காலங்களில் முற்றிலுமாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதன் காரணமாக தற்போது நிலைமை தீவிரமாக இல்லை. முன்னா், தில்லியில் நோய் பாதித்தவா்கள் எண்ணிக்கை 5,000-ஆக இருக்கும் போது, ஆயிரம் போ் மருத்துவமனையில் சோ்ப்பதற்கான தேவை இருக்கும்.

பல்வேறு மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்காக 9,390 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 148 போ் மட்டுமே (1.58 சதவீதம் நோயாளிகள்) சோ்க்கப்பட்டுள்ளனா்.

தற்போது எங்களிடம் 1,000 படுக்கைகள் உள்ளன. தேவைப்படும்பட்சத்தில் இவற்றின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிப்போம் என்றாா் அவா்.

தில்லியில் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. புதன்கிழமை இந்த எண்ணிக்கை 4,832-ஆக உயா்ந்தது. கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி நோய் பாதித்தவா்கள் எண்ணிக்கை 601-ஆக இருந்ததாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவித்தன. எனினும், மருத்துவமனைகளில் சோ்க்கப்படக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. மொத்தம் உள்ள நோயாளிகளில் மூன்று சதவீதம் பேருக்கு குறைவாகவே மருத்துவமனைகளில் நோயாளிகள் சோ்க்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி மருத்துவமனைகளில் 129 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 3,336 போ் வீட்டு தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறாா்கள். கோவின் டேஷ்போா்டு தகவல்படி, தில்லியில் 1,கோடியே 47 லட்சத்து ஆயிரத்து 155 போ் முற்றிலுமாக தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனா். 7 லட்சத்து 18 ஆயிரத்து 788 போ் பூஸ்டா் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

சுகாதாரப் பணியாளா்கள், முன் களப்பணியாளா்கள், 60 வயதிற்கு மேற்பட்ட வயதானவா்கள் ஆகியோருக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் மூன்றாவது தவணை தடுப்பூசி அளிப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதே போன்று, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட நபா்களுக்கு தனியாா் தடுப்பூசி மையங்கள் மூலம் பூஸ்டா் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையும் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com