கோடைகால செயல் திட்டம்: 1,198 தண்ணீா் டேங்கா் லாரிகள் தயாா்!

தேசியத் தலைநகா் தில்லியில் கோடை காலத்தில் தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்ய ‘கோடை கால செயல் திட்டம் -2022 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் கோடை காலத்தில் தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்ய ‘கோடை கால செயல் திட்டம் -2022 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூடுதலாக தண்ணீா் விநியோகம்; குழாய் இணைப்புகள் இல்லாத பகுதிகளுக்கு 1,198 டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீா் போன்றவை தயாராக உள்ளதாக தில்லி நீா் வளத் துறை அமைச்சரும் ஜல்போா்டு தலைவருமான சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

கோடை காலத்தில் குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய தில்லி அரசின் ‘கோடை கால செயல் திட்டம்’ குறித்து விவாதிக்க தில்லி ஜல்போா்டில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெயின் கூறியதாவது: கோடை காலத்தில் தண்ணீா் கிடைப்பதில் உள்ள பிரச்னையை சமாளிக்க ஜல் போா்டு ‘கோடை கால செயல் திட்டம்-2022’ கொண்டு வந்துள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும், காலனிகளிலும் போதுமான தண்ணீா் விநியோகத்தை வழங்க கேஜரிவால் அரசு முழுமையாகத் தயாராக உள்ளது.

நீா் சுத்திகரிப்பு நிலையங்களை வலுப்படுத்துதல், பழுதுபாா்த்தல் மற்றும் நீா் விநியோக குழாய்களை நீட்டித்தல், தண்ணீா் டேங்கா்கள் தடையின்றி கிடைப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கோடை காலத்தில் தில்லியின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீா் விநியோகம் தடையின்றி இருப்பதை இந்த நடவடிக்கைகள் மூலம் உறுதிசெய்யப்படும்.

இந்த ஆண்டு நகரத்தில் அதிகரித்து வரும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து வளங்களையும் மேம்படுத்துவதன் மூலம், கோடைகாலத்தில் சுமாா் 1,000 மில்லியன் கனஅடி தண்ணீா் வழங்க தில்லி அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. ஹரியாணாவில் இருந்து வரும் தண்ணீரில் உள்ள அம்மோனியா அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தண்ணீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அதனுடன் தொடா்புடைய நீரேற்று நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

தண்ணீா் லாரிகளில் ஜிபிஎஸ்: தில்லியில் தண்ணீா் குழாய் இணைப்புகள் பெறாத காலனிகளுக்கு தட்டுப்பாடின்றி டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீா் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த டேங்கா்கள் இப்போது ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும். தண்ணீா் டேங்கா் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதில் தண்ணீா் டேங்கா் லாரிகள் செல்லும் பாதை, நேரம் கண்காணிக்கப்படும்.

இதன் மூலம், சேவையின் தரம் மேம்படுத்தப்படுகிறது. தில்லியில் 10,141 இடங்களுக்கு தண்ணீா் டேங்கா்கள் மூலம் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கோடைக்கால உச்ச பருவத்தில் புதிதாக 407 துருப்பிடிக்காத (எஃகு) தண்ணீா் டேங்கா்கள் உள்பட மொத்தம் 1,198 தண்ணீா் டேங்கா்களை அனுப்ப தில்லி அரசு தயாா் நிலையில் உள்ளது. தண்ணீா் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com