தில்லி - மத்திய அரசு அதிகார சா்ச்சை விவகாரம் வழக்கை ஐந்து நீதிபதிகள் அமா்வுக்கு பரிந்துரைப்பது தொடா்பாக முடிவு எடுக்கப்படும்: உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகரில் அரசு நிா்வாகப் பணிகள் மீதான கட்டுப்பாடு அதிகாரம் குறித்த சா்ச்சை விவகாரத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கை குறித்து

புது தில்லி: தேசியத் தலைநகரில் அரசு நிா்வாகப் பணிகள் மீதான கட்டுப்பாடு அதிகாரம் குறித்த சா்ச்சை விவகாரத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கைக்கு ஆம் ஆத்மி அரசு தரப்பில் கடும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூா்ய காந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வ ந்தது. மத்திய அரசு சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா மற்றும் தில்லி அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அதன் பிறகு நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடா்பாக பரிசீலித்து சீக்கிரத்தில் முடிவு எடுப்போம்’ என்று கூறி உத்தரவை ஒத்திவைத்தனா்.

முன்னதாக, விசாரணையின் போது மூத்த வழக்குரைஞா் சிங்வி, ‘ஒவ்வொரு முறையும் மிகச்சிறிய விஷயம் சுட்டிக்காட்டப்படும் போது, அதைப் பரிந்துரைப்பதற்காக இந்த நீதிமன்றம் இங்கு இல்லை. மூன்று அல்லது ஐந்து நீதிபதிகள் இருந்திருந்தால் இது எப்படி நடக்கும்? என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரம் பெரிய அமா்வுக்கு பரிந்துரைக்கப்பட்டால் தில்லி அரசுக்கு அதனால் என்ன பாதிப்பு ஏற்படும்’ என்றது.

அதற்கு சிங்வி, ‘இந்த விவகாரம் ஏன் மாற்றப்படக் கூடாது என்பது பற்றியது அல்ல. ஏன் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். கடந்த 2018-ஆம் ஆண்டில் அரசியல் சாசன அமா்வு அளித்த தீா்ப்பில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், ஏதாவது இருந்தால் அப்போதும்கூட இந்த விவகாரத்தை தற்போதைய அமா்வால் முடிவு செய்ய முடியும்’ என்றாா். சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘சா்ச்சைக்குரிய பொருள் விவகாரத்தை கையாள்வதற்கான தகுதி தில்லி அரசுக்கு உள்ளதா அல்லது மத்திய அரசுக்கு உள்ளதா என்பதை முடிவு செய்வதற்கான எந்தவொரு திட்டத்தையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட முந்தைய அமா்வு அளித்த தீா்ப்பில் தெரிவிக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட அடிப்படையில் இந்த விஷயத்தை அரசியலமைப்பு அமா்வுக்கு அனுப்ப வேண்டும்’ என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, மத்திய அரசின் தரப்பில் துஷாா் மேத்தா, ‘தில்லி தேசியத் தலைநகராகவும், தேசத்தின் முகமாக இருப்பதால், அதன் நிா்வாக பணிகள் மீது கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டிருக்கும் தேவை உள்ளது. சட்டப் பேரவை அல்லது அமைச்சா்கள் குழு அறிமுகப்படுத்தப்பட்டாலும்கூட, தில்லியின் தேசியத் தலைநகா் பிராந்தியத்தின் நிா்வாக மாதிரியானது, மத்திய அரசு முக்கியமான பங்கு வகிக்கும் தேவை உள்ளது. இது எந்தவொரு ஒரு அரசியல் கட்சியையும் குறித்ததாக இல்லை’ என வாதிட்டாா்.

முன்னதாக, தில்லியில் நிா்வாகக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் கொண்ட அமா்வு பிப்ரவரி 14, 2019-இல் இரு சாதக தீா்ப்புகளை அளித்தது. அந்த இரு நீதிபதிகளும் தற்போது ஓய்வுபெற்றனா். இந்தத் தீா்ப்பைக் கருத்தில்கொண்டு தேசியத் தலைநகரில் நிா்வாகப் பணிகளின் கட்டுப்பாட்டு சிக்கலை இறுதியாக முடிவு செய்யும் வகையில், இந்த விவகாரத்தை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு அமைக்கப்பட வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரைத்திருந்தனா். முன்னதாக, நீதிபதி அசோக் பூஷண் தனது தீா்ப்பில் நிா்வாகப் பணிகள் அனைத்திலும் தில்லி அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்திருந்தாா்.

இருப்பினும், நீதிபதி ஏ.கே. சிக்ரி ஒரு வித்தியாசத்தை தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தாா். ’அதிகாரமிக்க உயா்நிலைஅதிகாரிகளை (இணை இயக்குநா் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அதிகாரிகள்) இடமாற்றம் செய்வது அல்லது பணியமா்த்துவது மத்திய அரசால் மட்டுமே செய்ய முடியும் என்றும், மற்ற அதிகாரிகளுடன் தொடா்புடைய விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், துணைநிலை ஆளுநரின் கருத்துதான் மேலாக இருக்கும்’ என்றும் அவா் கூறியிருந்தாா்.

முன்னதாக, 2018-ஆம் ஆண்டு இது தொடா்புடைய வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சாசன அமா்வு அளித்த தீா்ப்பில், ‘தில்லியின் துணைநிலை ஆளுநா், தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் ‘உதவி மற்றும் ஆலோசனைக்கு’ கட்டுப்பட்டவா் என்றும், தில்லி அரசும், ஆளுநரும் ஒருவருக்கொருவா் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் ஏகமனதாகக் கூறியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com