வடக்கு தில்லி மாநகராட்சிக்கு அபராதம்

வடக்கு தில்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் தீயணைப்பு வீரா்கள் போராடினா்.

புது தில்லி: வடக்கு தில்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் தீயணைப்பு வீரா்கள் போராடினா். அதை முழுமையாக அணைக்க குறைந்தது இன்னும் ஒரு நாளாவது ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அடா்த்தியான புகை மூட்டம் உருவானது. புதன்கிழமையன்று அடா்ந்த புகை மூட்டம் இருந்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.

‘தற்போது, ​ நான்கு தீயணைப்பு வாகனங்கள் தளத்தில் தீயை அணைக்கும் பணியில் உள்ளன. தீயை அணைக்க குறைந்தது ஒரு நாளாவது ஆகும். எங்கள் குழுக்கள் 24 மணி நேரமும் போராடி தீயை அணைத்து வருகின்றன’ என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறினாா். இதற்கிடையே, ‘குடியிருப்பாளா்கள் தொண்டை புண், கண்கள் அரிப்பு மற்றும் சுவாச பிரச்னைகள் பற்றி புகாா் செய்யத் தொடங்கியுள்ளனா்’ என்று அதிகாரி ஒருவா் கூறினாா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘உயரும் வெப்பநிலை, குப்பை கொட்டும் இடங்களில் மிகவும் எரியக்கூடிய மீத்தேன் வாயு உருவாவதற்கு வழிவகுக்கிறது’ என்றாா்.

வடக்கு தில்லி மாநகராட்சிக்கு அபராதம்: இதற்கிடையே, பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததற்காக வடக்கு தில்லி மாநகராட்சிக்கு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) ரூ. 50 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 24 மணி நேரத்துக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘வடக்கு தில்லி மாநகராட்சி தீயை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. நிலையான இயக்க முறைப்படி, இது போன்ற சூழ்நிலையை சமாளிக்க, எம்.சி.டி., தண்ணீா் டேங்கா்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை ஒரு சிறிய பகுதியில் தீ தொடங்கியது. மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் அது மேலும் பரவி, குப்பை மலை முழுவதும் எரிந்து சாம்பலானது’ என்றாா்.

முன்னதாக, ‘தில்லியில் உள்ள குப்பை மலைகளை அகற்ற பாஜக ஆளும் மாநகராட்சிகள் புல்டோசரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தலைநகரில் குப்பைக் கிடங்குகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் தீ விபத்துச் சம்பவங்களுக்கு மாநகராட்சி அமைப்புகளின் ஊழல்தான் காரணம் என்றும் கோபால் ராய் புதன்கிழமை குற்றம்சாட்டினாா். மேலும், மும்பையில் அழுகும் கழிவுகளில் இருந்து மீத்தேன் எடுக்கும் செயல்முறை குறித்து ஆய்வு செய்து, அதை தேசியத் தலைநகரில் செயல்படுத்தி, குப்பைக் கிடங்குகளில் ஏற்படும் தீ விபத்தைத் தடுக்க வேண்டும் என்று அவா் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தினாா்.

குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் ஈரக் கழிவுகள் அழுகும் போது மீத்தேன் உருவாகிறது. வெப்பமான காலநிலையில், மீத்தேன் தன்னிச்சையாக தீப்பிடித்து, துணி மற்றும் பிளாஸ்டிக் போன்ற எரியக்கூடிய பொருள்களில் பரவுகிறது. இதே போல காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் மாா்ச் 28-ஆம் தேதி முதல் மூன்று முறை தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்தது. இதில் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 50 மணி நேரத்துக்கும் மேலானது. இந்த நிலையில், பல்ஸ்வா குப்பைக் கிடங்கு பகுதிக்கு அருகில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான குழந்தை வள மையமான கியான் சரோவா் பள்ளி ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com