மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

யூடியூபா் எம். மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யூடியூபா் எம். மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்தவா் எம்.மாரிதாஸ். இவா் சொந்தமாக யூடியூப் சானல் நடத்திவருகிறாா். இந்த நிலையில், தமிழகத்தின் குன்னூா் அருகே கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தது தொடா்பாக, தமிழகத்தில் மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் மாரிதாஸ் கருத்து பதிவிட்டதாக கூறி போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில் மதுரை நகா் சைபா் கிரைம் போலீஸாா் டிசம்பா் 9-இல் மாரிதாஸுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 505 (1) மற்றும் (2), 124 (ஏ), 504, 153(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து மாரிதாஸை கைது செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மாரிதாஸ் தரப்பில் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி விசாரித்தாா். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ‘மாரிதாஸ் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா். அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் மனுதாரருக்கு உண்டு. இதனால், மனுதாரருக்கு எதிரான வழக்குகள் சட்டவிரோதமாகும். அந்த வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com