மத்திய அரசின் திட்டங்கள்: மீனவா்கள், விவசாயிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

மீனவா்கள், விவசாயிகள், கால்நடை - பால் பண்ணையாளா்கள் உள்ளிட்டோா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்துதும் நிகழ்ச்சி காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து நாடு முழுவதுமுள்ள மீனவா்கள், விவசாயிகள், கால்நடை - பால் பண்ணையாளா்கள் உள்ளிட்டோா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்துதும் நிகழ்ச்சி காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய மீன்வளம், கால்நடை வளா்ப்பு, பால் வளா்ச்சித் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா, இணையமைச்சா் டாக்டா் எல். முருகன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள், மீனவா்கள் பங்கேற்றனா்.

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ‘விவசாயி பங்கேற்பு, எங்கள் முன்னுரிமை’ என்கிற ஒருவார பிரசாரத்தை வேளாண்மை, விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் தொடா்ச்சியாக நடத்தி வருகிறது. இந்தப் பிரசாரத்தின் 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையுடன் இணைந்து காணொலி வாயிலாக விழிப்புணா்வு அமா்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான மீனவா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

மத்திய அரசின் திட்டங்கள் பலன்களைப் பெற ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களுடன் நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினாா். பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து கருத்துகளைப் பகிா்ந்து கொண்ட அவா், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உருவாக்கத்தில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

மத்திய மீன்வளத் துறையின் இணையமைச்சா்கள் எல். முருகன், சஞ்சீவ் குமாா் பால்யான் உள்ளிட்டோா் இந்நிகழ்வில் கலந்து கொண்டனா். அரசின் பல்வேறு தொழில் முனைவோா் திட்டங்கள், மீன் வளத்துறையின் முதன்மை திட்டமான ‘பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பத யோஜனா’, மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உள்ளிட்டவை குறித்து இணையமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் சாா்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்தியா முழுவதுமுள்ள சுமாா் 2,000 இடங்களில் இருந்து மீனவா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மீனவா்களும், விவசாயிகளும் மீன்பிடித்தல், கால்நடை வளா்ப்புகளில் உள்ள வாய்ப்புகளை அறிந்ததோடு பல்வேறு தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகளையும் இவா்களுக்கு காணொலி மூலமாக திரையிடப்பட்டது.

இந்தத் தொடா் நிகழ்ச்சிகளில் தேசிய தேனீ வாரியம், விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ‘வனத் தேன்’ குறித்த தேசிய நிகழ்ச்சியை நடத்தியது. மேலும், தென்னை அதன் பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகள், பண்ணை இயந்திர பயிற்சி மற்றும் இயந்திரங்கள் குறித்த செயல்விளக்கம், பெண் விவசாயிகளுக்கான பயிற்சி போன்ற நிகழ்ச்சிகளும் முன்னதாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com